
கிளாந்தான், அக்டோபர் 20 – கிளாந்தான் மாச்சாங் (Machang) பகுதியில் சிவப்பு போக்குவரத்து விளக்கை மீறி வந்த டிரெய்லர் மோதியதில், 26 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்தார்.
நேற்று இரவு 10.30 மணியளவில், மாச்சாங்–தானா மேரா (Machang–Tanah Merah) சாலையிலுள்ள போக்குவரத்து சிக்னல் சந்திப்பில் இந்த விபத்து நிகழ்ந்தது.
தானா மேரா (Tanah Merah) பகுதியிலிருந்து மாச்சாங் நோக்கிச் சென்ற டிரெய்லர், சிவப்பு விளக்கை மீறியதாகவும், படாங் கெலுபாங் (Padang Kelupang) பகுதியிலிருந்து தானா மேரா நோக்கிச் சென்ற பெரோடுவா ஆக்சியா (Perodua Axia) காரின் வலது பக்கத்தில் மோதியதாகவும் மாச்சாங் மாவட்டக் காவல் தலைவர் சூப்பிரிண்தெண்டன் அசுஹார் முகமட் நோர் (Azuhar Md Nor) தெரிவித்தார்.
இந்த மோதலில் காரை ஓட்டிச் சென்ற பெண் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 47 வயதுடைய டிரெய்லர் ஓட்டுநருக்குக் காயம் ஏற்படவில்லை.
மேலும், டிரெய்லர் ஓட்டுநரிடம் இருந்து கெத்தும் (Ketum) பானம் எனச் சந்தேகிக்கப்படும் திரவம் அடங்கிய நான்கு பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, அவர் நஞ்சுப் பொருட்கள் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இந்த விபத்து தொடர்பாகத் தகவல் தெரிந்தவர்கள் காவல்துறையைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது .



