
கோலாலம்பூர், ஆகஸ்ட்-30,சுவாச ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, காற்றின் தரம் மோசமடைவதற்கு முன்பாகக் குழந்தைகளை வெளியில் செல்வதைத் தவிர்த்து வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக வைத்திருக்குமாறு, பெற்றோர்களுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
வளரும் வயதில் இருக்கும் குழந்தைகளுக்குச் சுவாசப் பை மென்மையானது;அவர்கள் பெரியவர்களை விட வேகமாகச் சுவாசித்து அதிகளவிலான காற்று மாசுபாட்டை உடலுக்குள் எடுத்துக்கொள்கிறார்கள்.
எனவே, காற்றுத் தரம் அதிகாரப்பூர்வமாக “ஆபத்தானது” என அறிவிக்கப்படும் வரை காத்திருப்பது தாமதத்தை ஏற்படுத்தும் என்றும், அதற்கு முன்னதாகவே ஆஸ்மா போன்ற பிரச்னை உள்ள குழந்தைகளுக்குச் சுவாசக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
குழந்தைகளைப் பாதுகாக்க வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களை மூடி வைப்பது, வீடுகளுக்குள் காற்று சுத்திகரிப்பான்களைப் (HEPA Air Purifiers) பயன்படுத்துவது மற்றும் வெளிப்புற விளையாட்டுகளைத் தவிர்ப்பது அவசியம்.
ஒருவேளை குழந்தைகள் வெளியே செல்ல நேரிட்டால், சரியான அளவில் பொருந்தக்கூடிய KN95 சுவாசக் கவசங்களை அணியச் செய்யுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.



