குவாலா பிலா, ஏப்ரல் 3 – வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று, நகர்ந்து சென்று, குவாலா கிளவாங் ரமலான் சந்தையிலுள்ள கடை ஒன்றை மோதித் தள்ளிய சம்பவம் தொடர்பில், கணவன், மனைவிக்கு எதிராக இன்று நெகிரி செம்பிலான், குவாலா பிலா செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
கவனக்குறைவாக செயல்பட்டு விபத்தை ஏற்படுத்தியதாக அவர்கள் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
மார்ச் மாதம் 12-ஆம் தேதி நிகழ்ந்த அச்சம்பவத்தில், சம்பந்தப்பட்ட ரமலான் கடைக்காரர், கொதிக்கும் எண்ணெய் மேலே பட்டு மோசமான காயங்களுக்கு இலக்கானார்.
25 வயது சித்தி சலாசியா ஜூமா மற்றும் அவரது கணவரான 32 வயது முஹமட் பிர்டாவுஸ் சரிமான் ஆகிய இருவரும், காரில் தங்களின் ஐந்து மற்றும் ஒரு வயது பிள்ளைகளை விட்டு விட்டு, காரின் இயந்திரத்தை முடக்காமல் சென்றது தொடர்பில் முதல் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
அக்குற்றத்தை அவர்கள் இருவரும் ஒப்புக் கொண்ட வேளை ; அக்குற்றத்திற்கான தண்டனை மே மாதம் இரண்டாம் தேதி அறிவிக்கப்படுமென நீதிபதி தெரிவித்தார்.
இவ்வேளையில், அதே நீதிமன்றத்தில், சித்திக்கு எதிராக கவனக்குறைவாக செயல்பட்டு வியாபாரிக்கு காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டும் சுமத்தப்பட்ட வேளை ; அதனையும் அவர் ஒப்புக் கொண்டார்.
விபத்துக்குள்ளான காரின் உரிமையாளர் என்ற முறையில் அவர் அக்குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
அவ்வழக்குகான தண்டனை மே மூன்றாம் தேதி அறிவிக்கப்படவுள்ள வேளை ; அவ்விருவரையும் தலா ஐயாயிரம் ரிங்கிட் உத்தரவதாத் தொகையிலும், தனிநபர் உத்தரவாததின் பேரிலும் விடுவிக்க நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.