பியூபோர்ட், ஏப்ரல் 18 – சபா, பியூபோர்ட், மெம்பாகுட்டிலுள்ள, கைவிடப்பட்ட ஆசிரியர் குடியிருப்பிலுள்ள, அறை ஒன்றிலிருந்து மனித எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை மணி 8.53 வாக்கில், அந்த கைவிடப்பட்ட கட்டடத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த, துப்புரவு பணியாளர்கள் இருவர் அந்த எலும்புக்கூட்டை கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக அந்த கட்டடம் காலியாக கிடப்பதாக, பியூபோர்ட் மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் அசிஸ்டன் சுப்ரிடெண்டன் வெட்ரின் மொஜிங்கின் கூறியுள்ளார்.
அந்த எலும்புக்கூடு முழு ஆடை மற்றும் கால்சட்டையுடன், படுத்திருக்கும் நிலையில் காணப்பட்ட போதிலும், அதன் மண்டை ஓடு மட்டும் தனியாக பிரிந்து உடலின் பக்கவாட்டில் இருந்ததையும், வெட்ரின் உறுதிப்படுத்தினார்.
எலும்புக்கூடுகள் மட்டுமே எஞ்சியிருப்பதால், சம்பந்தப்பட்ட நபர் இறந்து நீண்ட காலம் ஆகியிருக்கலாம் என நம்பப்படுவதாகவும் அவர் சொன்னார்.
எனினும், உயிரிழந்தவர் யார் என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை. அதே சமயம், இதுவரை சம்பவ இடத்தில் குற்றச் செயல் நிகழ்ந்ததற்கான தடயம் எதையும் போலீஸ் அடையாளம் காணவில்லை.
அதனால், அச்சம்பவத்தை போலீஸ் ஒரு திடீர் மரணமாக வகைப்படுத்தி, விசாரணை மேற்கொண்டுள்ளது. குடும்ப உறுப்பினர்களை காணாமல் தேடிக் கொண்டிருப்பவர்கள் போலீசாரை தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.