
கோத்தா திங்கி, ஏப்-28-வெளிநாட்டுக் குடியேற்றக்காரர்களை சட்டவிரோதமாகக் கடத்தும் ஒரு கும்பலுக்கு எதிராக நடத்தப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கையின்போது ஒரு மலேசியருடன் 13 இந்தோனேசியர்கள் கைது செய்யப்பட்டனர்.
பெங்கராங்கில் உள்ள சுங்கை ரெங்கிட் கடற்கரை மற்றும் பெல்டா ஆயர் தாவார் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த கடத்தல் நடவடிக்கைக்கு முக்கிய நபராக விளங்கிய மலேசியர் வேறொரு இடத்தில் கைது செய்யப்பட்டதாக கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர் Superintendent யூசோப் ஒத்மான் ( Yusof othman ) தெரிவித்தார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் உளவு அதிகாரிகள் மற்றும் கெம் மஜிடியைத் தளமாகக் கொண்ட 10வது பட்டாளத்தின் அரச மலாய் ரெஜிமென்ட் வீரர்கள் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இரவு மணி 11.45 க்கு மேற்கொண்ட இந்த நடவடிக்கை மறுநாள் அதிகாலை 4 மணிக்கு முடிவடைந்தது.
தீவிர கண்காணிப்புக்குப் பிறகு சுங்கை ரெங்கிட்டில் உள்ள வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 11 இந்தோனேசிய ஆடவர்களும் ஒரு பெண்ணும் தடுத்து வைக்கப்பட்டதாக யூசோப் கூறினார்.
முதற்கட்ட சோதனையில், 12 இந்தோனேசியர்களும் செல்லுபடியாகும் பயண ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறியது தெரியவந்தது.
அவர்கள் தங்கள் சொந்த நாட்டிலிருந்து அண்மையில்தான் வந்திருப்பதாக நம்பப்படுகிறது என இன்று வெளியிட்ட அறிக்கையில் யூசோப் ஒத்மான் தெரிவித்தார்.



