Latestமலேசியா

சனுசியின் சர்ச்சைப் பேச்சு: நெகிரி பிரச்சாரத்துக்கு வர வேண்டாம் என சாஹிட்; இனவாத பேச்சுக்கு கோபிந்த் சிங் கண்டனம்

சிரம்பான், ஜூலை-26-இந்நாட்டு இந்தியர்கள் மற்றும் சீனர்களின் விசுவாசத்தைக் கேள்வி எழுப்பும் வகையில் பேசி சர்ச்சையில் சிக்கியுள்ள டத்தோ ஸ்ரீ சனுசி நோர், நெகிரி செம்பிலான் தேர்தல் பிரச்சாரத்துக்கு இனி வர வேண்டாம் என துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி அறிவுறுத்தியுள்ளார்.

அதே சமயம், மக்களின் நாட்டுப் பற்றைக் கேள்வி எழுப்ப வேண்டாம் என, DAP தேசியத் தலைவர் கோபிந்த் சிங் டியோ சனுசிக்கு நினைவுறுத்தியுள்ளார்.

முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தின் போது, _”இந்நாட்டு இந்தியர்களுக்கும் சீனர்களுக்கும் இந்தியா-சீனா என்ற பூர்வீக நாடுகள் உள்ளன; ஆனால் மலாய்க்காரர்களுக்கு என இருப்பது Tanah Melayu எனப்படும் இந்த ‘மலாய் மண்’ ஒன்று மட்டும் தான்”_ என கெடா மந்திரி பெசாரும், பெரிக்காத்தான் நேஷனல் தேர்தல் இயக்குநருமான சனுசி பேசியிருந்தார்.

இது மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், சனுசி இனி கெடாவில் கவனம் செலுத்துமாறும், இன்னும் 6 நாட்களே இருக்கும் நெகிரி செம்பிலான் தேர்தல் வரைக்கும் அங்கு வந்து அவர் முகத்தை காட்டத் தேவையில்லை என்றும் சாஹிட் கேட்டுக் கொண்டுள்ளார்.

பல்லின மக்களைப் பிளவுபடுத்தும் அரசியலைத் தவிர்க்குமாறும் அவர் எச்சரித்துள்ளார்.

_மலாய்க்காரர்களின் ஒற்றுமையை வலியுறுத்தி பேசுவது தப்பில்லை, ஆனால் அதற்காக மற்ற இனத்தாரை தேவையின்றி வம்புக்கு இழுத்து காயப்படுத்தக் கூடாது”_ என, பாரிசான் நேஷனல் தலைவருமான சாஹிட் சொன்னார்.

இதனிடையே, மலாய்க்காரர் அல்லாதோரின் தேசப்பற்றைக் கேள்விக்குள்ளாக்கும் சனுசியின் பேச்சு இனவெறியின் உச்சம் என, கோபிந்த் சிங் தனது ஊடக அறிக்கையில் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

இது மலேசியாவின் பல்லின அடித்தளத்தின் மீது நடத்தப்படும் நேரடித் தாக்குதல் என்றும் அவர் காட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

மலேசிய இந்தியர்கள் மற்றும் பிற இனத்தவர்கள் இந்நாட்டின் விருந்தினர்கள் அல்ல என்றும், சம உரிமைக் கொண்ட குடிமக்கள் என்றும் கோபிந்த் வலியுறுத்தினார்.

நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்த அவர்களின் தேசப்பற்றைக் கேள்விக்குள்ளாக்குவது பொறுப்பற்றது என்றும், வரவிருக்கும் நெகிரி மாநிலத் தேர்தலில் வாக்காளர்கள் இனவெறியை நிராகரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

சனுசியின் பேச்சு சர்ச்சையாகியுள்ள நிலையில், நாட்டின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதும், சமூக நல்லிணக்கத்தை நிலைநிறுத்துவதும் முன்னுரிமை என தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!