
கோலாலாம்பூர், மே-19-இந்திய மாணவர்களிடையே தடகளம் மற்றும் விளையாட்டுத் திறமைகளை அடிமட்ட நிலையிலிருந்தே வளர்த்தெடுக்கும் நோக்கில், கோலாலம்பூர், செகாம்புட் தமிழ்ப் பள்ளியில் புதிய ஓட்டப்பந்தயத் தடம் அமைக்கப்பட்டுள்ளது.
முக்கியப் போட்டிகளில் பயன்படுத்தப்படுவதைப் போல் 8 கோடுகள் கொண்ட அந்த தடகளத்தை கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹானா இயோ இதனை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.
செகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹானா இயோ, இப்பள்ளியின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காகத் தமது நாடாளுமன்றத் தொகுதி நிதியிலிருந்து நிதியுதவி வழங்கியிருந்தார்.
அதன் மூலம் பள்ளி வளாகத்தில் மாணவர்களின் தடகளப் பயிற்சிக்காக இந்த நவீன ஓட்டப்பந்தயத் தடம் தற்பொழுது வெற்றிகரமாக அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பேசிய அமைச்சர், தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் விளையாட்டுகளில், குறிப்பாகத் தடகளத் துறையில் இயல்பாகவே சிறந்த திறமைகளைக் கொண்டுள்ளனர் என்றார்.
முறையான உள்கட்டமைப்பு மற்றும் பயிற்சி வசதிகளை பள்ளியிலேயே ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம், எதிர்காலத்தில் அவர்கள் தேசிய மற்றும் அனைத்துலக அளவிலான தடகளப் போட்டிகளில் மலேசியாவைப் பிரதிநிதிதிக்கும் சிறந்த சாதனையாளர்களாக உருவெடுக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பள்ளி நிர்வாகமும், பெற்றோர்களும் இத்தகைய விளையாட்டு வசதிகளை மாணவர்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள ஊக்குவிக்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் பள்ளித் தலைமையாசிரியர், பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.



