
புத்ராஜெயா, செப்டம்பர் 25 – 11 ஆண்டுகளுக்கு முன், சிலாங்கூர் சுல்தானுக்கு எதிராக ஆவேசமான மற்றும் அவமதிக்கும் வார்த்தைகளை வெளியிட்ட குற்றத்திற்காக, வான் ஜி வான் ஹுசைன் இன்று தொடங்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் செய்திருந்த மேல்முறையீட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து, தண்டனை காலம் அமலுக்கு வந்தது.
41 வயது, சுயேட்சை சொற்பொழிவாளரான வான் ஜியின் மேல்முறையீட்டில் எந்த ஒரு மெரிட் தகுதியும் இல்லை என, மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு ஒருமனதாக தீர்ப்பளித்ததை தொடர்ந்து வான் ஜி சிறையில் அடைக்கப்பட்டார்.
எனினும், தமக்கு எதிராக விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து வான் ஜி செய்திருந்த மேல்முறையீட்டை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், இதற்கு முன் 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்பதாம் தேதி, ஷா ஆலாம் செஷனஸ் நீதிமன்றம் விதித்திருந்த ஒன்பது மாதச் சிறைத் தண்டனையை நிலைநிறுத்தி தீர்ப்பளித்தது.
அதன் வாயிலாக, அந்த ஒன்பது மாதச் சிறைத் தண்டனையை ஓராண்டாக அதிகரித்து தீர்ப்பளித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை இன்று மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
2014-ஆம் ஆண்டு, செப்டம்பர் பத்தாம் தேதி, சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுடின் இட்ரீஸ் ஷாவௌ அவமதிக்கும் வார்த்தைகளை வெளியிட்டதாக வான் ஜிக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.