கோலாலம்பூர், செப்டம்பர் -13 – சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலானில் 20 சிறார் இல்லங்களில் 402 சிறார்கள் சித்ரவதைக்கும் பாலியல் தொல்லைக்கும் ஆளான சம்பவம் குறித்து ஐநாவின் சிறுவர் நிதியமான UNICEF அதிர்ச்சியும் கவலையும் தெரிவித்துள்ளது.
அக்குழந்தைகள் நிச்சயம் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பர்; எனவே அவர்களுக்கு உரிய உளவியல் ஆதரவும் மருத்துவ சிகிச்சையும் அவசியமென, UNICEF -ஃபின் மலேசியப் பிரதிநிதி Robert Gass கூறினார்.
அக்குழந்தைகளை விரைந்து மீட்ட மலேசியப் போலீஸ் மற்றும் இதர அதிகாரத் தரப்புகளைப் பாராட்டுவதாகக் கூறியவர், அவர்களின் மீட்சிக்கான தொடக்கமாக இது இருக்கட்டும் என்றார்.
குழந்தைகளுக்கு எதிரான வன்முறைக்கு பூஜ்ய சகிப்புத் தன்மை கொள்கை முக்கியமானது.
காரணம், ஒவ்வொரு குழந்தைக்கும் அன்பான சூழலில் வளர உரிமையுண்டு என்றார் அவர்.
நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட Op Global சோதனை நடவடிக்கையின் போது 1 வயது குழந்தை முதல் 17 வயது வரையிலானவர்கள் மீட்கப்பட்டனர்.
அவர்களில் 201 பேர் பெண் பிள்ளைகள் ஆவர்.
இதையடுத்து, சிறார்களையும் மதத்தையும் சுயநலத்திற்காகப் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் நிறுவனம் நடத்தி வந்த அந்த இல்லங்களைச் சேர்ந்த 171 கைதாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.