
சீனா, ஜூன் 25 – வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் மின்சாரம் பயன்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், வீட்டில் 300-க்கும் மேற்பட்ட மலைப்பாம்புகளை சட்டவிரோதமாக வளர்த்து வந்த சீன நபர் ஒருவர் சிக்கியதுடன், அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஜெஜியாங் (Zhejiang) மகாணத்தில் அரிய வகை மலைப்பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அது வளர்ப்பிடத்திலிருந்து தப்பியிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். மலைப்பாம்புகளை வளர்க்க அதிக வெப்பநிலையும் ஈரப்பதமும் தேவைப்படுவதால், சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தியவர்களின் விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
இதன் மூலம் சம்பந்தப்பட்ட அந்த ஆடவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 309 மலைப்பாம்புகள் மீட்கப்பட்டன.
மேலும், அந்நபர் மற்றும் அவரது கூட்டாளிகளும் 80 மலைப்பாம்புகளை விற்பனை செய்திருப்பதும் கண்டறியப்பட்டது. இந்த வழக்கில் மொத்தம் 436 மலைப்பாம்புகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட மூவருக்கும் நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளது.



