
ஷா ஆலாம், ஜூலை-29-சிலாங்கூர், செத்தியா ஆலாமில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் வெளிநாட்டவரின் குடியேற்றப் பகுதிகள் மீது உடனடியாக அமுலாக்க நடவடிக்கை எடுக்குமாறு, மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற சிலாங்கூர் மாநில பாதுகாப்பு பணிக்குழுவின் முடிவைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இததையடுத்து, ஷா ஆலாம் மாநகர மன்றமான MBSA, சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும்.
மேலும், அந்த நிலங்கள் அரசுக்கு சொந்தமானதா அல்லது தனியார் நிலங்களா என்பதையும் உறுதிச் செய்யும்.
முன்னதாக, செத்தியா ஆலாம் மற்றும் கம்போங் புடிமான் பகுதிகளில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் வசிக்கும் நூற்றுக்கணக்கான சட்டவிரோத வீடுகள் உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இதனிடையே, ஆய்வு அறிக்கைகளின் அடிப்படையில் அங்கு சட்டவிரோதக் குடியேற்றங்கள் இருப்பது உறுதியானால், பல நிறுவனங்கள் ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கையை மேற்கொள்ளும் என குடிநுழைவு இலாகா உறுதிப்படுத்தியுள்ளது.
நில உரிமைகளை ஆய்வு செய்து, சட்டவிரோதக் கட்டமைப்புகளை அகற்றுவதற்கு விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என அமிருடின் உறுதியளித்துள்ளார்.



