
ஜகார்த்தா, ஆகஸ்ட்-4-ஜூலை 28-ஆம் தேதி கோலாலம்பூரிலிருந்து ஜகார்த்தா சுகார்னோ-ஹாட்டா விமான நிலையத்திற்கு வந்திறங்கிய 39 வயதான மலேசிய விமானி போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதன் புதிய CCTV காட்சிகளை இந்தோனேசிய சுங்கத்துறை வெளியிட்டுள்ளது.
அந்தக் காட்சிகளில், அவ்விமானி conveyer belt இயந்திரத்திலிருந்து ஒரு வெள்ளி நிறப் பெட்டியை எடுத்துக்கொண்டு, மற்றொரு கருப்பு நிறப் பெட்டியையும் உருட்டிச் செல்வது தெரிகிறது.
அவர் விமானப் பணியாளர்களுக்கான விரைவுப் பாதையில் சென்றபோதிலும், சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் அவரைத் தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனையிட்டனர்.
அந்தப் பெட்டியிலிருந்த ஆடைகளை அகற்றி சோதனையிட்டபோது, மறைத்து வைக்கப்பட்டிருந்த பழுப்பு நிறப் பொட்டலங்களிலிருந்து 70 ஆயிரத்திற்கும் அதிகமான எக்ஸ்டசி மாத்திரைகளும் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டன.
மேலும், சிறுநீர் பரிசோதனையை ஏமாற்றுவதற்காக, ஏற்கனவே தயாராக வைக்கப்பட்டிருந்த போலி சிறுநீர் பாட்டிலும் அதில் சிக்கியது.
50,000 ரிங்கிட் கூலிக்காக இக்கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அந்த விமானி, இதற்கு முன்னரும் இதே பாணியில் போதைப்பொருள் கடத்தியது தெரியவந்துள்ளது.
இதனிடையே, அதிநவீன X-Ray பரிசோதனை முறைகளையும் தாண்டி 26 கிலோ கிராம் போதைப்பொருள் KLIA விமான நிலையத்திலிருந்து எவ்வாறு கொண்டுச் செல்லப்பட்டது என்பது குறித்து, மலேசிய போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையும் மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனமான AKPS-சும் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளன.
அவ்விமானியின் பயணப் பெட்டி KLIA-வில் பரிசோதனை இயந்திரத்தை கடக்கும் போது சந்தேகத்திற்குரிய எந்தப் பொருளும் கண்டறியப்படவில்லை.
இதையடுத்தே அவர் விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட்டதாக, AKPS தலைமை இயக்குநர் டத்தோ ஸ்ரீ Mohd Shuhaily Mohd Zain நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
எனினும், விசாரணையைப் பாதிக்கக் கூடும் என்பதால், தற்போதைக்கு இது குறித்து AKPS மேற்கொண்டு கருத்துரைக்காது என்றார் அவர்.
தற்சமயம் அந்த விமானி இந்தோனேசியப் போலீஸாரின் பிடியில் உள்ளார்.



