
கோலாலம்பூர், செப்டம்பர்-19-நிறுவன அமைப்பின் கீழ் இயங்கும் தனியார் கல்வி நிலையங்கள் மற்றும் டியூஷன் மையங்கள் 2027-ஆம் ஆண்டு முதல் 30 விழுக்காடு பூமிபுத்ரா பங்குரிமை கொண்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனை குறித்துக் கல்வி அமைச்சு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என ம.இ.கா வலியுறுத்தியுள்ளது.
அடுத்தாண்டு முதல் இந்த 30 விழுக்காட்டுப் பங்குகளைப் பூர்த்திச் செய்யாத கல்வி நிறுவனங்கள், தங்களின் பதிவைப் புதுப்பிக்க முடியாமல் போகலாம் என்ற தகவல்கள் வெளியாகி பெரும் விவாதங்களை எழுப்பியுள்ளன.
இது குறித்து ம.இ.கா தேசிய வியூக இயக்குநர் டத்தோ சி. சிவராஜ் வெளியிட்ட அறிக்கையில், பூமிபுத்ராக்களின் பொருளாதாரப் பங்களிப்பை உயர்த்துவதை ஆதரித்தாலும், அதற்காகப் பூமிபுத்ரா அல்லாதவர்களின் வணிக உரிமைகளைப் பலவந்தமாகப் பறிக்கக் கூடாது எனத் தெரிவித்தார்.
பல ஆண்டுகளாக முறையாக இயங்கி வரும் ஒரு வணிகத்தின் உரிமத்தைப் புதுப்பிக்க, பிறருக்குப் பங்குகளை விட்டுக்கொடுக்க நிர்ப்பந்திப்பது நியாயமற்றது என அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நடவடிக்கை இந்தியர்கள், சீனர்கள் மற்றும் சபா, சரவாக்கைச் சேர்ந்த பூமிபுத்ரா அல்லாத தொழில்முனைவோரைப் பெரிதும் பாதிக்கும் எனவும் அவர் கூறினார்.
எனவே, ஏற்கனவே வெற்றிகரமாக இயங்கும் நிறுவனங்களின் பங்குகளைக் குறிவைக்காமல், புதிய நிதி உதவி, பயிற்சி மற்றும் வணிக வாய்ப்புகள் மூலம் பூமிபுத்ராக்களின் பங்களிப்பை அரசாங்கம் உயர்த்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.



