
கோலாலம்பூர் – தமிழ்க் கல்விக்காகவும் தமிழ்மொழியின் வளர்ச்சிக்காகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்களைக் கௌரவிக்கும் பெருமைமிகு தருணம் நெருங்கிவிட்டது. நாட்டில் முதன்முறையாக தமிழ்க் கல்வியாளர்களுக்கென முன்னெடுக்கப்பட்டுள்ள ‘தகைமை விருதுகள் 2026’ விழா, வரும் செப்டம்பர் 20ஆம் தேதி மிட்லண்ட்ஸ் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
தமிழ்க் கல்வி ஆளுமை இயக்கமான TAGAMAI முன்னெடுக்கும் இந்த விருது விழா, பிற்பகல் 3 மணிக்குத் தொடங்குகிறது. தமிழ்க் கல்வி மற்றும் தமிழ்மொழிக்காகப் பங்களித்த கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் தமிழ்த் தொண்டர்களின் சேவையை அங்கீகரித்து, அவர்களுக்குரிய பெருமையை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
மூத்த கல்விமான்களான டத்தோ டாக்டர் என்.எஸ். ராஜேந்திரன் மற்றும் டாக்டர் கே. நாகலிங்கம் ஆகியோர் இம்முயற்சியை ஒருங்கிணைத்து வருகின்றனர்.
தன்னார்வ அடிப்படையில் முன்னெடுக்கப்படும் இந்த விருது விழாவின் நோக்கம் மற்றும் அதன் சிறப்புகள் குறித்து ஏற்பாட்டுக் குழுத் தலைவர் டத்தோ டாக்டர் என்.எஸ். ராஜேந்திரன் விளக்கினார்.
இதனிடையே, விருதுக்குரியவர்களைத் தேர்வு செய்ய மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகள் மற்றும் ஒவ்வொரு பிரிவிற்கும் கிடைத்த விண்ணப்பங்கள் குறித்து TAGAMAI துணைத் தலைவர் டாக்டர் கே. நாகலிங்கம் விவரித்தார்.
தமிழ்ப்பள்ளியின் சிறந்த தலைமைத்துவ விருது, சிறந்த தமிழ்ப்பள்ளி ஆசிரியர் விருது, சிறந்த தமிழ்மொழி ஆசிரியர் விருது, சிறந்த இடைநிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் விருது, சிறந்த கல்லூரி அல்லது பல்கலைக்கழக தமிழ் விரிவுரையாளர் விருது, தமிழ்க் கல்வி வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் தமிழ் மொழி அல்லது தமிழ்க் கல்வி வளர்ச்சிக்கான சிறப்பு விருது என மொத்தம் ஏழு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன.
ஏழு பிரிவுகளுக்குமான வெற்றியாளர்கள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களின் பெயர்கள் விருது விழா வரை ரகசியமாக வைக்கப்படுகின்றன. இது குறித்து விழாக் குழு செயலாளர் C.M. திரவியம் விளக்கமளித்தார்.
ஒவ்வொரு விருது பெறுநருக்கும் பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசு வழங்கப்படவுள்ளது.
தமிழுக்கும் தமிழ்க் கல்விக்கும் அர்ப்பணிப்புடன் பங்களித்து வருபவர்களின் சேவையை அங்கீகரித்து, அவர்களுக்குரிய பெருமையை வழங்கும் ‘தகைமை விருதுகள் 2026’ விழாவின் அதிகாரப்பூர்வ ஊடக ஆதரவாளராக வணக்கம் மலேசியா இணைந்துள்ளது.
விழா தொடர்பான மேலதிக விவரங்களுக்கு, விழாக் குழு செயலாளர் C.M. திரவியத்தைத் தொடர்புகொள்ளலாம்.



