
ஈப்போ, அக்டோபர் 2 – தாயைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட 49 வயது பெண்ணுக்கு மனநல பரிசோதனை நடத்த ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அந்தப் பெண், கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி இரவு, மெங்லெம்புவிலுள்ள (Menglembu) தாமான் வாங் பகுதியில் தனது 70 வயது தாயைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது, அதை அவர் புரிந்துகொண்டதாக கூறினாலும், கொலை வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பில் இருப்பதால், அவரிடம் குற்ற ஒப்புதல் பதிவு செய்யப்படவில்லை. அவரது மனநிலை மற்றும் வழக்கை எதிர்கொள்ளும் தகுதியைத் தீர்மானிக்க மனநல அறிக்கை பெற நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு மீண்டும் நவம்பர் 2ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. முன்னதாக, மார்பில் கத்திக்குத்துக் காயத்துடன் அந்த மூதாட்டி உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகவும், சந்தேகநபருக்கு மனநலப் பிரச்சினைகள் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்திருந்தனர்.



