
பினாங்கு, செப்-28-மலேசிய இலக்கவியல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, பினாங்கில் B40 பிரிவைச் சேர்ந்த சிறுநீரகச் சுத்திகரிப்பு சிகிச்சை பெறும் 50 நோயாளிகளுக்கு உதவ 50,000 ரிங்கிட் நன்கொடை வழங்கியிருக்கிறார். அதன் வழி ஒவ்வொரு நோயாளிகளும் ஒரு தடவையாக தலா 1,000 ரிங்கிட் நிதியுதவியைப் பெறுகின்றனர்.
அவர்களின் டயாலிசிஸ் சிகிச்சை மற்றும் அன்றாட வாழ்க்கைச் செலவுகளால் ஏற்படும் நிதிச் சுமையை குறைக்கும் நோக்கில் அந்த நிதியுதவி வழங்கப்பட்டது. அந்நிதி கோபிந்த் சிங் டியோவின் தனிப்பட்ட பங்களிப்பாகும்.
பினாங்கு இந்து அறக்கட்டளை வாரியமான PHEB மூலம் அந்நிதியுதவி அளிக்கப்பட்டது. இவ்வாண்டில் PHEB மேற்கொள்ளும் டயாலிசிஸ் உதவித் திட்டத்தின் இரண்டாவது கட்டம் அதுவாகும்.
கடந்த ஏப்ரல் மாதம், PHEB தனது சொந்த நிதியில் இருந்து 50 டயாலிசிஸ் நோயாளிகளுக்கு உதவி வழங்கியிருந்தது. செப்டம்பர் மாத இரண்டாவது கட்டத்துக்கான முழுத் தொகையான 50,000 ரிங்கிட்டை கோபிந்த் சிங் டியோ வழங்கியுள்ளார்.

அண்மையில் பினாங்கில் உள்ள Kompleks Masyarakat Penyayang வளாகத்தில் நடைபெற்ற நிதியுதவி வழங்கும் நிகழ்வில், கோபிந்த் சிங் டியோ சார்பில் ராம்கர்பால் சிங் கலந்து கொண்டார். PHEB தலைவர் RSN ராயர், துணைத் தலைவர் செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் ஆர். அருணாசலம் உள்ளிட்டோரும் அந்நிகழ்வில் பங்கேற்றனர்.
B40 குடும்பங்களைச் சேர்ந்த டயாலிசிஸ் நோயாளிகளுக்கு தொடர்ச்சியான சிகிச்சை நிதிச் சுமையை ஏற்படுத்துவதால், அந்த நிதியுதவி பேருதவியாக இருக்கும் என PHEB தெரிவித்தது. அதே சமயம் தேவைப்படுவோருக்கு தொடர்ந்து உதவ முன்வந்த கோபிந்த் சிங் டியோவுக்கு அது நன்றி தெரிவித்துக் கொண்டது.



