
ஈப்போ, அக்டோபர்-2,பேராக், பீடோர் சென்ட்ரலில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் தொழிலதிபர் ஒருவர் சுடப்பட்ட சம்பவம் தொடர்பில், 9 பேரிடம் போலீஸார் வாக்குமூலம் பதிவுச் செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட நபர், அவரது வாகனத்தில் இருந்த 3 குடும்ப உறுப்பினர்கள், அருகிலிருந்த வாகனத்தில் இருந்த இருவர் மற்றும் பெட்ரோல் நிலைய ஊழியர்கள் ஆகியோரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக பேராக் போலீஸ் தலைவர் டத்தோ Alwi Zainal Abidin தெரிவித்தார்.
ஓட்டுநர் உட்பட குறைந்தது மூவர் இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
சந்தேக நபர்கள் பயன்படுத்திய வாகனத்தின் பதிவெண்ணும் போலியானதாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
இதனிடையே, தாக்குதலுக்கு முன்பு அந்தத் தொழிலதிபர் பின்தொடரப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இடது தோள்பட்டையில் துப்பாக்கிச் சூட்டால் காயமடைந்த அவர், அறுவை சிகிச்சைக்குப் பின்னர் தற்போது சீரான நிலையில் உள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.



