
கெமாமான், ஜூலை 23 – கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணாமல் போன 70 வயதான முதியவர், இன்று திரெங்கானு செனே பகுதியிலுள்ள கம்போங் பாரு நேராம் 1 (Kampung Baru Neram 1, Cheneh) அருகிலுள்ள சதுப்பு நிலத்தில் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டார்.
தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் இன்று காலை, தேடுதல் முகாமிலிருந்து சுமார் 600 மீட்டர் தொலைவில் அவரது உடலை மீட்டனர்.
அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் உறவினர் வீட்டிலிருந்து தனியாக வெளியேறியிருந்தார். அதன் பிறகு வீடு திரும்பாததால், அவர் காணாமல் போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
நான்கு நாட்களாக நடைபெற்ற தேடுதல் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் படை, STORM மற்றும் K9 பிரிவுகள், தன்னார்வ தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள் ஆகியோர் இணைந்து ஈடுபட்டனர்.
முதியவர் உயிரிழந்ததை சுகாதார அமைச்சின் மருத்துவக் குழுவும் போலீசாரும் உறுதிப்படுத்தினர். பின்னர் அவரது உடல் மேல் விசாரணைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.



