தென் ஆப்பிரிக்க கால்பந்து வீரர் ஜெய்டன் ஆடம்ஸ் 25 வயதில் அதிர்ச்சி மரணம்

ஜொஹனஸ்பர்க், ஜூலை-12 – தென் ஆப்பிரிக்காவின் வளர்ந்து வரும் கால்பந்து நட்சத்திரமும், 2026 உலகக் கிண்ணப் போட்டியில் அதன் தேசிய அணிக்காக விளையாடியவருமான ஜெய்டன் ஆடம்ஸ் (Jayden Adams), தனது 25-ஆவது வயதில் அதிர்ச்சி மரணமடைந்துள்ளார்.
தலைநகர் கேப் டவுன் நகரில் உள்ள ஒரு வீட்டில் சனிக்கிழமை காலை ஆடம்ஸின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
அவரது இறப்புக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும், இது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது நடைபெற்று வரும் உலகக் கிண்ணப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்காக குழு நிலையிலான 3 ஆட்டங்களிலும் விளையாடி, அவ்வணி அடுத்தச் சுற்றுக்கு முன்னேறவும் அவர் உறுதுணையாக இருந்தார்.
இந்நிலையில், ஆடம்ஸின் மறைவு, தென் ஆப்பிரிக்கா மற்றும் உலகக் கால்பந்து இரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
“தென் ஆப்பிரிக்க கால்பந்து ஒரு சிறந்த இளம் திறமையை இழந்துவிட்டது” என, தென் ஆப்பிரிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் தனது ஆழ்ந்த வருத்தத்தைப் பகிர்ந்துள்ளார்.
FIFA தலைவர் Giono Infantino-வும் இரங்கல் தெரிவித்த நிலையில், இன்று காலை இங்கிலாந்து – நோர்வே அணிகள் மோதிய காலிறுதி ஆட்டத்திற்கு முன்பாக, ஆடம்ஸின் அகால மரணத்திற்கு அரங்கில் 1 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.



