ஷா அலாம், ஏப் 2 – தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு அவற்றை கொல்லும் அணுகுமுறையை சிலாங்கூர் அரசாங்கம் மீண்டும் மறுஆய்வு செய்யும் என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் Ng Suee Lim தெரிவித்திருக்கிறார். தெரு நாய்கள் விவகாரத்தில் மனிதாபிமானத்தோடு நடந்துகொள்ள வேண்டும் என சிலாங்கூர் Tengku Permaisuri Norashikin நேற்று கூறியிருந்த ஆலோசனையை வரவேற்பதாக ஊராட்சி மன்றத்திற்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான
Ng Suee Lim தெரிவித்தார். நாய்களை பிடித்து அவற்றை கொல்லும் தற்போதைய அணுகுமுறைக்கு பதிலாக மாற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் கூறினார்.
தெருநாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக அவற்றை பிடித்து கருத்தடை செய்வதோடு அவற்றிற்கு வீடமைப்பு பகுதிகளில் புகலிடம் ஒன்றை உருவாக்க வேண்டுமென Norashikin கூறியிருந்தது விவேகமான கருத்தாக இருக்கும் என்பதால் இதனை சிலாங்கூர் மாநில அரசாங்கங்கள் பரிசீலிக்கலாம் என Ng Suee Lim தெரிவித்தார். ஷா அலாமில் செத்தியா வட்டாரத்தில் சுற்றித் திரியும் 500க்கும் மேற்பட்ட நாய்களை பிடிக்கும் மூன்று நாள் இயக்கம் மேற்கொள்ளப்படும் என்றும் பிடிக்கப்படும் நாய்கள் பின்னர் கொல்லப்படும் என்பதோடு இந்த நடவடிக்கையில் கலந்துகொண்டு நாய்களை பிடித்து கொடுக்கும் தன்னார்வலர்களுக்கு ஒரு நாய்க்கு 30 ரிங்கிட் வெகுமதி வழங்கப்படும் என ஷ ஆலாம் மாநகர் மன்றம் அறிவிப்பு ஒன்றையும் இதற்கு முன் வெளியிட்டிருந்தது.
இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் கடுமையாக கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து பிடிக்கப்படும் நாய்கள் தனது கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருக்கும் வேளையில் உணவுகள் வழங்கப்பட்டு பின்னர் மேல் நடவடிக்கைக்காக பிராணிகள் நல சங்கத்திடம் ஒப்படைக்கப்படும் என இம்மாதம் 30 ஆம் தேதி ஷா அலாம் மாநகர் மன்றம் வெளிட்ட ம அறிக்கையில் தெரிவித்தது.