
சுபாங் ஜெயா, ஆகஸ்ட்.11-சிலாங்கூர், சுபாங் ஜெயாவில் Seri Nipah அடுக்குமாடி குடியிருப்பில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 34 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மொத்தம் 280 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது. அவர்களில் அந்த 34 பேரும் பல்வேறு குடிநுழைவு விதிமீறல்களுக்காகக் கைதாகினர்.
அடையாள ஆவணங்கள் இல்லாதது, அனுமதிச் சீட்டு நிபந்தனைகளை மீறியது, அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு மேல் தங்கியிருந்தது, அங்கீகரிக்கப்படாத அட்டைகளை வைத்திருந்தது ஆகியவை அக்குற்றங்களில் அடங்கும். கைதானவர்கள் 20 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.
அவர்களில் 23 பேர் ஆண்கள். எஞ்சிய 11 பேர் பெண்கள். அவர்கள் இந்தோனேசியா, வங்காளதேசம், இந்தியா, மியான்மர், நேபாளம், தாய்லாந்து மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
சோதனை நடவடிக்கையின் போது, பலமுறை வீடுகளின் கதவைத் தட்டியும் உள்ளே இருந்த சிலர் கதவைத் திறக்க மறுத்தனர். அதே வேளை மேலும் சிலர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றதாக குடிநுழைவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை மற்றும் நடவடிக்கைகளுக்காக, பிடிபட்ட அனைவரும் Semenyih குடிநுழைவு தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, அல்பகுதியில் வெளிநாட்டினரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், குடிபோதை மற்றும் சண்டைகள் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதாக அப்பகுதிவாசிகள் தெரிவித்தனர்.
கடந்த சில ஆண்டுகளாக, குறிப்பாக மியான்மர் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த வெளிநாட்டினரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் அப்பகுதியைச் சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் பணி புரிவதாக நம்பப்படுவதாகவும் அவர்கள் கூறினர்.



