
புத்ராஜெயா, செப்டம்பர்-23,நெகிரி செம்பிலான் மாநிலச் செயலாளர் மற்றும் மாநில சட்ட ஆலோசகர் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்வதற்கான அதிகாரம், மாநில ஆட்சிக் குழுவுக்கு இல்லை என தேசிய சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மாநிலச் செயலாளரை நியமிப்பது அல்லது பணியிடை நீக்கம் செய்வது தொடர்பான அதிகாரம் பொதுச் சேவை ஆணையத்திடமே இருப்பதாக அது கூறியது.
அதேவேளையில், மாநில சட்ட ஆலோசகர் தொடர்பான அதிகாரம் நீதித்துறை மற்றும் சட்ட சேவை ஆணையத்தின் கீழ் வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெகிரி செம்பிலான் மாநில அரசியலமைப்பின் 37-ஆவது பிரிவின் கீழ் இந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் விளக்கமளித்துள்ளது.
முன்னதாக, மாநிலச் செயலாளர் Mohd Zafir Ibrahim
மற்றும் மாநில சட்ட ஆலோசகர் Muzalmah Mustapha ஆகியோரை பணியிடை நீக்கம் செய்ய சிறப்பு மாநில ஆட்சிக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக மந்திரி டத்தோ பெசார் இஸ்மாயில் லாசிம் அறிவித்திருந்தார்.
மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்களின் நியமனங்களை நெகிரி செம்பிலான் சமஸ்தானாதிபதி துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிர் இரத்துச் செய்ததைத் தொடர்ந்து இந்த விவகாரம் எழுந்துள்ளது.



