
காத்மண்டு, அக்டோபர் 6 – நேப்பாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வெள்ளத்தில் குறைந்தது 1,455 பேர் உயிரிழந்ததுடன், 5,285 பேர் காணாமல் போயுள்ளனர். மேலும், 13,795 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
சீனாவின் திபேத் எல்லைப் பகுதியிலிருந்து உருவான இந்த வெள்ளம், சாலைகள், பாலங்கள், விவசாய நிலங்கள், குடியிருப்புகள் மற்றும் 12 நீர்மின் திட்டங்களை அழித்துள்ளது.
காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் காப்பீடு, வங்கி உள்ளிட்ட சட்ட நடைமுறைகளை கையாளுவதற்கு வசதியாக, அவர்களை சட்டப்பூர்வமாக உயிரிழந்தவர்களாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
இனி உடல்களைத் தீவிரமாகத் தேடாமல், மறுவாழ்வுப் பணிகளின்போது கிடைக்கும் மனித உடல் பாகங்கள் மற்றும் உடைமைகள் மீட்கப்படுமென அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெள்ளத்தால் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்களின் ஆரம்பகட்ட மீட்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக்கு சுமார் 5 பில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படுமென நேப்பாள அரசு மதிப்பிட்டுள்ளது.



