Latestமலேசியா

போலி இந்தியப் போலீஸ் சீருடையைப் பயன்படுத்தி நூதன மோசடி: கும்பலை முறியடித்த மலேசியப் போலீஸ்

கோலாலாம்பூர், மே-5,

போலி இந்தியப் போலீஸ் சீருடைகளைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வந்த ஒரு கும்பலை மலேசியப் போலீஸார் அதிரடியாகக் கைதுச் செய்துள்ளனர்.

இந்தக் கும்பல் மலேசியாவில் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கொண்டு, வீடியோ அழைப்புகள் மூலம் இந்தியாவில் உள்ளவர்களை ஏமாற்றி வந்துள்ளது.

அழைப்பின் போது உண்மையான இந்தியப் போலீஸ் அதிகாரி போலத் தோற்றமளிக்க, அவர்கள் இந்தியப் போலீஸ் துறை சீருடைகளை அணிந்து கொண்டு பேசியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்பு கொள்ளும் இவர்கள், இந்தியாவில் உள்ள உயர்மட்ட போலீஸ் அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக் கொள்வார்கள்.

அவர்கள் மீது பணமோசடி அல்லது போதைப்பொருள் வழக்கு இருப்பதாகப் பயமுறுத்தி, வழக்கில் இருந்து தப்பிக்க ‘சமரசம் செய்ய’ பெருந்தொகை கோருவது இவர்களின் வழக்கம்.

இந்தச் சோதனையின் போது 2 தைவானியர்கள், 13 பாகிஸ்தானியர்கள், 2 பெண்கள் உட்பட 6 இந்தியப் பிரஜைகள், உள்ளூரைச் சேர்ந்த ஒரு சீன ஆடவர் என 22 பேரை போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து மடிக்கணினிகள், கைபேசிகள் மற்றும் மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட பல போலீஸ் சீருடைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சீருடை அணிந்த அதிகாரிகள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக அதிகாரப்பூர்வ அழைப்புகளை மேற்கொள்வதில்லை என்றும், பொது மக்கள் இதுபோன்ற அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் போலீஸார் எச்சரித்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!