
மலாக்கா, அக்-29-மலேசிய இந்திய மக்கள் கட்சியான MIPP, மலாக்கா மாநிலத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் (PN) கூட்டணியின் கீழ் போட்டியிடுவதிலிருந்து விலக முடிவு செய்துள்ளது. MIPP-க்கும் PN தலைமையுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாததைத் தொடர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் எஸ்.பி. புனிதன் தெரிவித்தார்.
முக்கியத்துவம் இல்லாத தேர்தல் தொகுதிகளைப் பெறுவதைக் காட்டிலும், கட்சியின் கௌரவத்தையும் போராட்டக் கொள்கைகளையும் பாதுகாப்பதற்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பைப் பெற வேண்டும் என்பதற்காக MIPP தனது கொள்கைகளில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது என அவர் கூறினார்.
அரசியல் கூட்டணிகள் கூட்டு உணர்வு, பரஸ்பர மரியாதை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை ஆகியவற்றின் அடிப்படையில் செயல்பட வேண்டும். வலுவான கூட்டணி என்பது சில கட்சிகளின் பலத்தை மட்டும் சார்ந்திருக்காமல், ஒற்றுமை, நம்பிக்கை மற்றும் ஒவ்வொரு கட்சியின் நலன்களுக்கும் மதிப்பளிக்கும் மனப்பான்மையின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும் புனிதன் வலியுறுத்தினார்.
இந்தியச் சமூகத்தின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதே MIPP-ன் முக்கிய நோக்கம். நாட்டின் அரசியல் களத்தில் இந்தியச் சமூகத்தின் குரலுக்கும் நலன்களுக்கும் உரிய அங்கீகாரமும் இடமும் வழங்கப்பட வேண்டும். இந்நிலையில், பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு காணப்படாதபோது, கட்சியின் கொள்கைகள் மற்றும் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையில் முடிவெடுக்க வேண்டியது அவசியம் என அவர் விளக்கினார்.
தேர்தல் இடங்களை வேறு எங்கு வேண்டுமானாலும் தேடிக் கொள்ளலாம்; ஆனால் கட்சியின் போராட்ட கடப்பாட்டை ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது என்று புனிதன் ஆணித்தரமாகத் தெரிவித்தார்.



