புது டெல்லி, ஆகஸ்ட்-21, மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை (ஆய்வு மையம்) அமைக்கப்படவிருக்கிறது.
புது டெல்லி சென்றுள்ள பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இருவருக்கும்மிடையிலான பேச்சுவார்த்தையின் பலனாக அவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழாராய்ச்சிப் பணிகளுக்கு மற்றொரு கௌரவமாக இந்த திருவள்ளுவர் இருக்கை அமைகிறது.
இவ்வேளையில் துங்கு அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகத்தில் ஆயுர்வேத இருக்கை அமைக்கப்படுகிறது.
அந்த இந்திய பாரம்பரிய வைத்திய முறை குறித்து கல்வி பயிலுவதையும் ஆராய்ச்சி மேற்கொள்வதையும் அது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியாவின் அவ்விரண்டு முக்கியக் கோரிக்கைகளையும் ஏற்றுக் கொண்டு ஒத்துழைப்பு வழங்கிய அன்வாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக மோடி தமதுரையில் கூறினார்.
இது போன்ற ஒத்துழைப்புகள் இரு நாடுகளுக்கு இடையிலான நீண்ட கால நல்லுறவை மேலும் அணுக்கமாக்குமென மோடி நம்பிக்கைத் தெரிவித்தார்.
திருவள்ளுவர் இருக்கை , ஆயுர்வேத இருக்கைகளோடு சேர்த்து மலேசியா – இந்தியா இடையில் நேற்று 8 புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்தியத் தொழிலாளர்கள் மலேசியாவுக்குள் வருவதை எளிதாக்குதல், இந்தியா – ஆசியான் இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்வது உள்ளிட்டவையும் அவற்றில் அடங்கும்.