Latestமலேசியா

மித்ராவில் நிதி முறைக்கேடு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளது -எம்.ஏ.சி.சி மதிப்பீடு

கோலாலம்பூர், நவ 25 – மித்ராவில் நிதி நிர்வாக முறைகேடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் தற்போது குறைந்திருப்பதாக எம்.ஏ சி.சி எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் மதிப்பீட்டை பெற்றுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு நிதியைத் தவறாக நிர்வகித்ததாக பல குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்த மித்ரா நவம்பர் 22ஆம் தேதியன்று எம்.ஏ.சி.சியின் ஒருமைப்பாடு மேலாண்மைப் பிரிவு இயக்குநர் டத்தோ நோர் அஸ்மி கரீம் கையொப்பமிட்ட கடிதத்தில் தற்போது முறைக்கேடு வாய்ப்புகள் குறைந்திருப்பதாக 2023ஆம் ஆண்டிற்கான மறுமதிப்பீடு செய்யப்பட்ட அறிவிப்பைப் பெற்றது.

இந்த கடிதம் கிடைத்ததை மித்ராவின் சிறப்பு பணிக்குழுத் தலைவர் டத்தோ ஆர். ரமணன் உறுதிப்படுத்தியுள்ளார்.

எம்.ஏ.சி.சி-யின் தொடர் ஒத்துழைப்பிற்கும், மித்ராவிற்கு வழங்கியுள்ள அசைக்க முடியாத ஆதரவிற்கும் தாம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். நிதி நிர்வாகம் தொடர்பில் இந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ள இந்த மறுமதிப்பீட்டு நிலை மித்ராவுக்கு சந்தேகத்திற்கு இடமின்றி சாதமாக இருக்கும் என ரமணன் தெரிவித்தார்.

மித்ரா சிறப்பு செயற்குழுவின் தலைவர் பொறுப்பை ஏற்றதிலிருந்து அதன் மீதான மக்களின் நம்பிக்கையை திரும்ப பெறுவதில் தாமும் தம் குழுவினரும் கடும் பாடுபட்டதாக சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான ரமணன் கூறினார். கடந்த காலங்களில் மித்ரா மீது வைக்கப்பட்ட நிதி முறைக்கேட்டு குற்றச்சாட்டுகளாலும் நீதிமன்ற வழக்குகளாலும் அதன் தோற்றம் பாதிக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.

அதே வேளையில் மித்ராவின் நிதி நிர்வாகம் மற்றும் செயல்பாட்டு முறையை வலுப்படுத்துவதில் குறிப்பாக நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மை விவகாரங்களில் தாம் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

எம்.ஏ.சி.சி-யின் இந்த மறுமதிப்பீட்டு நிலை மித்ராவிற்கு ஒரு நம்பிக்கைக்குரிய தொடக்கத்தைக் கொடுத்துள்ளதைக் குறிக்கிறது.
அடுத்தாண்டில் மேலும் சில புதிய சமூக உருமாற்ற முன்னெடுப்புகளை மேற்கொள்ள நான் திட்டமிட்டுள்ளேன். அவை நிச்சயம் இந்திய சமூகத்திற்கு பெரும் பயனளிக்கும் என நம்புகிறேன் என்றார் ரமணன்.

இந்திய சமூகத்தை, குறிப்பாக வசதிக் குறைந்த பி40 பிரிவினரை மேம்படுத்துவதே எங்கள் குறிக்கோள். நேரம் வரும்போது நான் அதற்கான அறிவிப்புகளை வெளியிடுவேன் என்றும் அவர் கூறினார்.

இதனிடையே எம்.ஏ.சி.சி-யின் இந்த மதிப்பீட்டு அறிவிப்பு நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டது என மித்ரா தலைமை நிர்வாக அதிகாரி ரவீந்திரன் நாயர் தெரிவித்தார்.

பல ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட எங்களுக்கு இந்த மறுமதிப்பீட்டு முடிவு சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு சாதகமான அறிகுறியாகும்.

மித்ரா தொடர்ந்து நாணயமான, செயல்திறன்மிக்க மற்றும் நம்பகத்தன்மையான சேவை செயல்பாட்டு முறைக்கு முன்னுரிமை அளிக்கும். மித்ராவில் நிர்வாக அமைப்பை வலுப்படுத்த குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வந்த டத்தோ. ரமணனுக்கும் அவரது தலைமையிலான குழுவினருக்கும் நாங்கள் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என ரவீந்திரன் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!