
கோலாலம்பூர், அக்-08-Yayasan Bank Rakyat (YBR) கையாண்ட 10 மில்லியன் ரிங்கிட் முதலீட்டில் ஒரு சென் கூட இழப்பு ஏற்படவில்லை என அதன் முன்னாள் தலைவர் Dato Seri Nazir Hussin Akhtar Hussin தெரிவித்திருக்கிறார். முதலீட்டுத் தொகை முழுமையாக மீட்கப்பட்டதுடன் 1.85 மில்லியன் ரிங்கிட் hibah வருமானமும் பெறப்பட்டதாக அவர் தெளிவுபடுத்தினார்.
YBR-ன் முதலீடு நல்ல நிர்வாகம், உரிய விடாமுயற்சி மற்றும் முறையான நிர்வாகக் கோட்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன. ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் கிடைத்த hibah வருமானம் YBR கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்ட நிலையில், அந்த முதலீடு 2022 நவம்பரில் முடிவுக்கு வந்ததாக அவர் தெரிவித்தார்.
தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்த Nazir, YBR முதலீடு செய்த நிறுவனத்தைத் தாம் அல்லது தமது சகோதரர் சொந்தமாகக் கொண்டிருக்கவில்லை என்றார். YBR முதலீட்டுக்குப் பின்னரே தமது சகோதரர் அந்த நிறுவனத்தில் முதலீட்டாளராக இணைந்ததாகவும், எனவே அந்த முதலீட்டை தமது சகோதரருக்குச் சொந்தமான நிறுவனத்தில் செய்ததாகக் கூறுவது தவறு என்றும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, செப்டம்பர் 30ஆம் தேதி மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC தமது வீட்டில் சுமார் 12 மணி நேரம் சோதனை நடத்தியதுடன், கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களையும் பறிமுதல் செய்ததாக Nazir கூறினார். YBR நிதியில் முறைகேடு நிகழ்ந்ததாக் கூறப்படும் விவகாரம் தொடர்பான விசாரணையில், ஏற்கெனவே சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு விசாரணைக் கோப்பு திறக்கப்பட்டதாகவும், 2022ஆம் ஆண்டு எந்த முறைகேடும் அடையாளம் காணப்படவில்லை எனத் தமக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஏழு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது YBR விவகாரம் தொடர்பாக ஒரு நாள் மட்டுமே தம்மிடம் விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறிய Nazir, MACC நடவடிக்கைகள் குறித்து சட்ட ஆலோசனைகளைப் பெற்று வருவதாகவும், தேவையானால் சிவில் நடவடிக்கை உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாகவும் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் நீதி, வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயமான நடைமுறை உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.



