Latestமலேசியா

ராக்கி நாய் மாண்டது தொடர்பில் இருவர் மீது குற்றச்சாட்டு

கிள்ளான், ஆகஸ்ட்-20- சிலாங்கூர், கிள்ளானில் ராக்கி என்ற ஆண் நாய் மாண்டதற்குக் காரணமாக இருந்ததாக ஆண் மற்றும் பெண் ஒருவர் மீது இன்று கிள்ளான் sessions நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. 24 வயதான Muhammad Shah Idham Nor Haikal Shaharom, 42 வயதான எஸ். ரோகினி தேவி ஆகிய இருவரும் கடந்த ஜூலை 29 ஆம் தேதி இரவு 11 மணி முதல் 11.30 மணிக்குள் Taman Telok Gedung Indah, Jalan Sama Gagah 20 பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன் அக்குற்றத்தை புரிந்ததாகக் கூறப்படுகிறது.

2015 விலங்குகள் நலச் சட்டம் பிரிவு 29(1)(e)-இன் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, அதே சட்டத்தின் பிரிவு 29(1)-இன் கீழ் அவ்விருவருக்கும் எதிரான குற்றச்சாட்டுகள் தனித்தனியாக வாசிக்கப்பட்டன. குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20,000 ரிங்கிட் முதல் 100,000 ரிங்கிட் வரையிலான அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது அவை இரண்டுமே விதிக்கப்படலாம். குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட போது அமைதியாகக் காணப்பட்ட அவ்விருவரும் தங்கள் வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர்.

ஒவ்வொருவருக்கும் தலா ஒரு ஜாமீன்தாரருடன் 20,000 ரிங்கிட் ஜாமீன் தொகையை நிர்ணயிக்கவும் கூடுதல் நிபந்தனை விதிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டது. இருவரின் வழக்கறிஞர்கள் பல்வேறு காரணங்களை எடுத்துரைத்து அவற்றைக் குறைக்குமாறு கேட்டுக் கொண்டதை அடுத்து, இறுதியில் தலா ஒரு ஜாமீன்தாரருடன் 6,000 பிணைத் தொகை நிர்ணயிக்கப்பட்டது. மேலும் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் மாதத்திற்கு ஒருமுறை சிலாங்கூர் மாவட்ட காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது. அவ்வழக்கு அக்டோபர் 8 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

கடந்த மாதம் குடியிருப்புப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கையொன்றின் போது ராக்கி நாய் உயிரிழந்தது. Jalan Sama Gagah Rukun Tetangga மன்ற அதிகாரிகளுக்கு உதவ, அங்கிருந்து வந்த எழுத்துப்பூர்வ அழைப்பின் பேரில் தாம் ஒரு சமூகப் பிரதிநிதியாகச் செயல்பட்டதாகவும் நாயைத் துன்புறுத்தவோ அல்லது கொல்லவோ இல்லை எனவும் Shah Idham இதற்கு முன் கூறியிருந்தார். சம்பவ நாளன்று தாம் வீட்டிற்குத் திரும்பிய போது, ​​ராக்கியின் கழுத்தில் ஒரு சுருக்குக் கயிறு கட்டப்பட்டிருந்ததைக் கண்டு, நாயை விடுவிக்குமாறு தாம் பல முறை மன்றாடியும் அது நிராகரிக்கப்பட்டதாக ரோகினி கூறியிருந்தார்.

இம்மாதம் 2 ஆம் தேதி, அந்நாயின் சடலத்தைப் பெற்ற கால்நடைச் சேவைத் துறையின் விலங்குகள் நலக் குழுவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்து, வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர். அச்சம்பவம் மீதான காணொளியொன்று முன்னதாக வைரலாகி பலரது கண்டனத்திற்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!