Latestமலேசியா

லஞ்சம் பெற்றுக் கொண்டு கடத்தல் கும்பலுக்கு உடந்தை; 4 அரசாங்க ஊழியர்கள் கைது

கோலாலம்பூர், மார்ச்-13 கடத்தல் கும்பலிடம் இருந்து 5 மில்லியன் ரிங்கிட்டை லஞ்சமாகப் பெற்ற சந்தேகத்தின் பேரில், அரசாங்க ஊழியர்கள் நால்வர் கைதாகியுள்ளனர்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் MACC-யின் கருப்புப் பணத் தடுப்புப் பிரிவு, LHDN மற்றும் Bank Negara இணைந்து மேற்கொண்ட சிறப்பு அதிரடி சோதனையில் நேற்று கைதான 8 பேரில் அவர்களும் அடங்குவர்.

40 -50 வயது மதிக்கத்தக்க அந்நால்வரும் 2018 முதல் கடந்தாண்டு வரை அக்கடத்தல் கும்பலுக்கு உடந்தையாக இருந்து வந்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து வீடுகள், கார்கள், கைப்பேசிகள், மடிக்கணினிகள் மற்றும் 6 மில்லியன் ரிங்கிட் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டன.

அதோடு 12 மில்லியன் ரிங்கிட் பணத்தைக் கொண்ட 237 வங்கிக் கணக்குகளையும் MACC முடக்கியது.

விசாரணைகளுக்கு உதவ ஏதுவாக வெள்ளிக் கிழமை வரை அவர்கள் தடுத்து வைக்கப்பட்ட வேளை, அவர்களின் மற்றொரு சகாவுக்கும் MACC வலை வீசியுள்ளது.

கடத்தல் கும்பலுக்கு உடந்தையாக இருந்ததன் மூலம், வரி வசூலிப்பில் அரசாங்கம் சுமார் 40 கோடி ரிங்கிட் வருமான இழப்புக்கு ஆளாக அவர்கள் காரணமாக இருந்திருக்கின்றனர்.

இவர்கள் போன்ற அரசு ஊழியர்களைக் கையில் போட்டுக் கொண்டு, புகையிலை, சிகரெட், மதுபானம் உள்ளிட்டவற்றை அக்கடத்தல் கும்பல் நாட்டுக்குள் கடத்திக் கொண்டு வந்திருப்பது அம்பலமாகியுள்ளது.

வேலையைக் கச்சிதமாக முடிக்க, பினாமி வங்கிக் கணக்குகளின் வாயிலாக அரசு ஊழியர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டு வந்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!