கோலாலம்பூர், ஏப்ரல் 2 – லண்டன் கிளாசிக் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பை வென்ற தேசிய ஸ்குவாஷ் வீராங்கனை எஸ்.சிவசங்கரிக்கு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
“வாழ்த்துகள். இந்த வெற்றி எதிர்காலத்தில் மேலும் பல வெற்றிகளுக்கு வழிவகுக்கும் என நம்புகிறேன்” என பிரதமர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
PSA – தொழில்முறை ஸ்குவாஷ் அசோசியேஷன் போட்டியின், இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்ற முதல் மலேசிய விளையாட்டாளர் எனும் பெருமையையும் சிவசங்கரி பெற்றுள்ளார்.
இதற்கு முன், 2015-ஆம் ஆண்டு, நாட்டின் தேசிய ஸ்குவாஷ் தாரகை டத்தோ நிகோல் டேவிட் அந்த உலகம் தரம் வாய்ந்த இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று நடைபெற்ற, லண்டன் கிளாசிக் ஸ்குவாஷ் போட்டியின், இறுதி ஆட்டத்தில், உலகின் இராண்டாம் நிலை வீராங்கனையான எகிப்தின் ஹனியா எல் ஹம்மாமியை வீழ்த்தியதன் வாயிலாக, சிவசங்கரி தனக்கென புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளார்.