
கோலாலம்பூர், அக்.07- தலைநகர் முழுவதும் 49 இடங்களில் சட்டவிரோதமாக வாகன நிறுத்துமிடக் கட்டணம் வசூலித்து வந்த 84 பேரை கோலாலம்பூர் மாநகர் மன்றமான DBKL கைது செய்துள்ளது.
அத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகள் நிகழும் இடங்களை அடையாளம் கண்டு, அவற்றைத் தடுக்க தொடர்ந்து அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கோலாலம்பூர் மேயர் Datuk Seri Fadlun Mak Ujud தெரிவித்தார். சில நேரங்களில் அதிகாரிகள் வருவதைக் கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பிவிடுவதாக அவர் கூறினார்.
சில இடங்களில் அவர்கள் குழுவாக செயல்படுவதால், ஒருவரைக் கைது செய்யும்போது மற்றவர்கள் அங்கேயே பிற பகுதிகளில் இருக்கின்றனர். இருப்பினும், 49 இடங்களிலும் அவ்வப்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, சட்டவிரோதமாக கட்டணம் வசூலிப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என அவர் உறுதியளித்தார்.
அவர்களுக்கு முன்னறிவிப்பு எதுவும் வழங்கப்படுவதில்லை. சோதனையின்போது கண்டறியப்பட்டவுடன் நேரடியாக கைது செய்யப்படுவதாக Fadlun Mak Ujud தெரிவித்தார்.
Maluri MRT வாகன நிறுத்துமிடத்தில் ஒருவர் சட்டவிரோதமாக 5 ரிங்கிட் கட்டணம் வசூலிப்பதாகக் கூறி சமூக ஊடகங்களில் முன்னதாக பதிவுகள் வைரலாகின. அந்நபர் வாகன நிறுத்துமிட நுழைவாயிலில் கட்டண வசூல் தொடர்பான பதாகையையும் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.



