கோலாலம்பூர், ஏப்ரல்-3, நாடு முழுவதுமுள்ள கூட்டரசு சாலைகளில் வாகனங்களுக்கான வேகக் கட்டுப்பாடு தற்காலிமாக மணிக்கு 10 கிலோ மீட்டர் குறைக்கப்படுகிறது.
அதாவது நடப்பில் மணிக்கு 90 கிலோ மீட்டராக உள்ள வேக வரம்பு, மணிக்கு 80 கிலோ மீட்டராகக் குறைக்கப்படுகிறது.
நோன்புப் பெருநாளை ஒட்டி ஏப்ரல் 8 முதல் 14 வரை அது அமுலில் இருக்கும் என பொதுப்பணித் துறை அமைச்சு அறிக்கையொன்றில் கூறியது.
அந்த ஒரு வார கால வேக வரம்புக் குறைப்பானது, விழாக் கால விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் முயற்சியே.
வழக்கத்தை விட விழாக்காலத்தின் போது அதிகளவில் சாலை விபத்துகள் பதிவாகி வருவதால், ஒரு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் அது அமைவதாக அமைச்சு விளக்கியது.
இவ்வேளையில், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வண்ணம், ஏப்ரல் 5 முதல் 14 வரை அவசரத் தேவையில்லாத
நிர்மாணிப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளை நிறுத்தி வைக்குமாறு கூட்டரசு சாலைகளின் பராமரிப்பு நிறுவனங்கள் பணிக்கப்பட்டுள்ளன.
குழி அடைப்புப் பணிகள் உள்ளிட்ட அவசிய – அவசரத் தேவைகளுக்கு அதில் விலக்கு உண்டு என அமைச்சு கூறியது.
இதனிடையே, நெடுஞ்சாலைகளில் அவசிய – அவசரத் தேவைகள் இல்லாத பட்சத்தில் ஏப்ரல் 1 முதல் 17 வரை எந்தவொரு பாதையையும் போக்குவரத்துக்கு மூடக்கூடாது என பராமரிப்பு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.