Latestமலேசியா

அதிகாரமற்ற சுகாதார சேவை ஆணையம் என்பது பற்களற்ற ஆணையமே! – செனட்டர் லிங்கேஸ்வரன்

கோலாலம்பூர், அக்- 28–புதிய பதவிகளை உருவாக்குவதற்கும், ஊதியம் மற்றும் இழப்பீட்டு முறைகளைத் தீர்மானிப்பதற்கும் அதிகாரமில்லாத சுகாதார சேவை ஆணையத்தை அமைப்பதால் எந்தப் பயனும் இல்லை என செனட்டர் டாக்டர் ஆர்.ஏ. லிங்கேஸ்வரன் தெரிவித்திருக்கிறார். இத்தகைய அதிகாரங்கள் பொதுச் சேவைத் துறையான JPA மற்றும் நிதி அமைச்சிடமே இருக்குமானால், அந்த ஆணையத்தின் நோக்கம் கேள்விக்குறியாகிவிடும் என அவர் கூறினார்.

கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி மக்களவையில் பேசிய சுகாதார அமைச்சர் Datuk Seri Dr.Dzulkefly Ahmad, சுகாதார சேவை ஆணையத்தை அமைப்பதற்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார். எனினும், புதிய பதவிகளை உருவாக்குவது மற்றும் ஊதியம், இழப்பீடு தொடர்பான முடிவுகளை எடுப்பது ஆகியவற்றில் அந்த ஆணையத்திற்கு அதிகாரம் இருக்காது என்பதை அவர் ஒப்புக் கொண்டதை லிங்கேஸ்வரன் சுட்டிக் காட்டினார்.

இந்த ஆணையத்தை அமைக்க வேண்டும் என 2023-ஆம் ஆண்டு முதலே தாம் வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிட்ட அவர், அதன் செயல்பாட்டு வரம்பு மனிதவள நிர்வாகத்துடன் மட்டும் நின்றுவிடக்கூடாது என்றார். சுகாதார வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சீர்திருத்தங்களுக்கு ஏற்ப, பணியாளர் திட்டமிடல், பணியாளர் பற்றாக்குறை, நிரந்தரப் பணிகள், தொழில்முறை வளர்ச்சி மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் நலன் ஆகியவற்றையும் ஆணையம் கையாள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மருத்துவராகவும் முன்னாள் மருத்துவமனை இயக்குநராகவும் இருந்த தாம் சுகாதாரப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களை நேரடியாக அறிந்துள்ளதாகக் கூறிய லிங்கேஸ்வரன், அறிவிப்புகளை வெளியிடுவதைக் காட்டிலும் நடைமுறைக்கு ஏற்ற தீர்வுகளே அவசியம் என வலியுறுத்தினார். எனவே, ஆணையத்திற்குப் போதுமான அதிகாரங்களும் தெளிவான பொறுப்புகளும் வழங்கப்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

மாற்றத்தை ஏற்படுத்தும் அதிகாரம் இல்லாமல் பெயரளவில் மட்டுமே செயல்படும் ஆணையத்தை உருவாக்குவது பொதுமக்களின் நேரத்தையும் பணத்தையும் வீணடிக்கும். சுகாதாரப் பணியாளர்களுக்கு அவசியம் உண்மையான சீர்திருத்தங்களே; அதிகாரமற்ற ஆணையம் அல்ல என்றும் லிங்கேஸ்வரன் குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!