
பத்து பஹாட், அக்டோபர் 28- மலேசியாவில் மூன்று மாதங்களாகப் பணியாற்றி வந்த 29 வயதுடைய நேப்பாள ஆடவன், 19 வயதுடைய பெண் சக ஊழியருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக இன்று பத்து பஹாட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
கடந்த அக்டோபர் 23ஆம் தேதி நண்பகல் 12.40 மணியளவில், ஸ்ரீ காடிங் தொழிற்பேட்டையிலுள்ள மின்னணுப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையின் ஓய்வறையில் இருந்த பெண்ணிடம் அவர் முறையற்ற வகையில் நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மறுநாள் இரவு 9.50 மணியளவில் ஜாலான் குளுவாங்கிலுள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான தங்குமிடத்தில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவியல் சட்டத்தின் கீழ் அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை, அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.
வழக்கின் மறுவிசாரணை நவம்பர் 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டை நேப்பாள மொழியில் மொழிபெயர்த்துக் கூறுவதற்காக மொழிபெயர்ப்பாளர் ஆஜராக வேண்டியிருப்பதால் இந்த ஒத்திவைப்பு வழங்கப்பட்டது.
மேலும், 8,000 ரிங்கிட் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதித்தபோதும், பிணைத்தொகையைச் செலுத்தத் தவறியதால் அவ்வாடவன் தற்காலிகமாக மூவார் சீர்திருத்த மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.



