
புத்ராஜெயா, அக்டோபர் 28 – மத அறிவு குறைவாக இருந்தும், பிறரை எளிதில் இறைநம்பிக்கையற்றவர், மதம் மாறியவர் அல்லது நயவஞ்சகர் என முத்திரை குத்தும் சிலரின் போக்கு கவலைக்குரியது எனப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் (Datuk Seri Anwar Ibrahim) தெரிவித்துள்ளார்.
மத அறிவு, ஒழுக்கம், தனிப்பட்ட பண்புகள், மிதமான அணுகுமுறை மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றை முஸ்லிம்கள் மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
புத்ராஜெயாவில் உள்ள செரி பெர்டானா வளாகத்தில் இன்று நடைபெற்ற Majlis Ilmu MADANI நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், மத அறிவை வளர்ப்பது தனிநபர்களின் பொறுப்பு மட்டுமல்ல; சமூகத்திற்குச் சரியான புரிதலை வழங்குவதை உறுதிசெய்வது தலைமைத்துவத்தின் பொறுப்பும்கூட என்றார்.
மேலும், போதிய அறிவின்றி அரசியல், பொருளாதாரம், சமூக, கலாசார மற்றும் கல்வி விவகாரங்கள் குறித்து விவாதிப்பது தவறான புரிதல்களுக்கு வழிவகுக்கும் என்றும், இஸ்லாமியக் கல்வி மற்றும் பாரம்பரிய அறிவுச் செல்வங்களைப் பற்றிய புரிதலை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் இந்தோனேசியாவின் பிரபல சமயப் போதகர் உஸ்தாஸ் அப்துல் சோமாட் படுபாரா (Ustaz Abdul Somad Batubara) சிறப்புரையாற்றினார். பிரதமரின் மனைவி டத்தோ ஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் (Datuk Seri Dr Wan Azizah Wan Ismail) நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.



