
ஜோகூர் பாரு, அக்-28-வெளிநாட்டு தொழிலாளர் நிறுவனமொன்றிடமிருந்து சுமார் 1 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் கேட்டு, அதனைப் பெற்றதாகச் சந்தேகிக்கப்படும் இரு மத்திய அமலாக்க நிறுவன அதிகாரிகள் உட்பட ஐந்து பேரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC கைது செய்துள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் கீழுள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு எதிராக அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருக்க அவர்கள் லஞ்சம் பெற்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
40 முதல் 60 வயதுக்கு இடைப்பட்ட மூன்று ஆண்களும் இரு பெண்களும் சிலாங்கூர் மற்றும் ஜோகூர் மாநிலங்களில் நேற்று காலை 10 மணி முதல் மாலை 4 மணிக்குள் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின்போது கைது செய்யப்பட்டனர். அவர்களில் இருவர் மத்திய அமலாக்க நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள்; ஏனைய மூவரும் வெளிநாட்டு ஊழியர் முகவர் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள்.
ஜோகூர் பாரு sesyen நீதிமன்றத்தில் MACC சமர்ப்பித்த விண்ணப்பத்தைத் தொடர்ந்து, மாஜிஸ்திரேட் திலிப் நாயர் ஆர்.என். அச்சுதன், சந்தேக நபர்களை நவம்பர் 1-ஆம் தேதி வரை ஐந்து நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, அவர்கள் அனைவரும் 2018 முதல் 2025-ஆம் ஆண்டு வரை கூட்டுச் சேர்ந்து அச்சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது. அக்காலகட்டத்தில் சுமார் 1 மில்லியன் ரிங்கிட், 44 இணையப் பரிவர்த்தனைகள் மூலம் செலுத்தப்பட்டுள்ளது. அதன் தொடர்பில் 2019-ஆம் ஆண்டு முதல் விசாரணை நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, MACC புலனாய்வுப் பிரிவும் ஜோகூர் MACC-யும் இணைந்து நேற்று கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் ஜோகூர் பாருவில் ஒருங்கிணைந்த நடவடிக்கையை மேற்கொண்டன.
இவ்வேளையில், அக்கைது நடவடிக்கையை ஜோகூர் MACC இயக்குநர் Datuk Hazrul Shazreen Abdul Yazid உறுதிப்படுத்தியுள்ளார். 2009-ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.



