அலோர் காஜா, ஆகஸ்ட்-12, மலாக்காவில் 33 வயது ஆசிரியை இஸ்திகோமா அஹ்மாட் ரொசி (Istiqomah Ahmad Rozi) 7 மாதங்களாகக் காணாமல் போன சம்பவத்தின் மர்ம முடிவு அவிழ்ந்துள்ளது.
பூலாவ் சேபாங், கம்போங் ரீமாவ் அருகேயுள்ள ஜாலான் அலோர் காஜா-தம்பின் சாலையோர கால்வாய் குப்பைத் தொட்டியில் தலையில்லாமல் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலமே, இஸ்திகோமா என போலீஸ் உறுதிச் செய்துள்ளது.
ஆகஸ்ட் 2-ம் தேதி புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை நடத்திய மரபணு பரிசோதனையில் அது உறுதிச் செய்யப்பட்டதாக, அலோர் காஜா மாவட்ட போலீஸ் தலைவர் அஷாரி அபு சமா (Ashari Abu Samah) தெரிவித்தார்.
3 பிள்ளைகளுக்குத் தாயான இஸ்திகோமா, 2023 டிசம்பர் 26-ஆம் தேதி ஜோகூர் பாசீர் கூடாங்கில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.
அச்சடலமோ, கடந்தாண்டு டிசம்பர் 31-ஆம் தேதி அலோர் காஜாவில் கண்டெடுக்கப்பட்டது.
அச்சம்பவம் தொடர்பில் பேராக், ச்செமோரில் (Chemor) முன்னதாக 36, 37 வயது கணவன் மனைவி கைதாகி தடுத்து வைக்கப்பட்டனர்.
அச்சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணையின் பலனாக, இஸ்திகோமாவின் மண்டை ஓடு, கைவிரல் எலும்புகள் உள்ளிட்ட எஞ்சிய உடல் பாகங்கள், அவரது சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டன.
இவ்வேளையில், சந்தேக நபரான ஆடவரின் தடுப்புக் காவல் மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் மனைவிக்கும் அச்சம்பவத்திற்கும் சம்பந்தமில்லை எனக் கூறி போலீஸ் அவரை விடுவித்தது.