
ஜோகூர் பாரு, ஏப்ரல்-25-ஆறாம் படிவ மாணவர்களுக்கு மாதாந்திர அலவன்ஸ் தொகை வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
மெட்ரிகுலேஷன் மாணவர்களுக்கு ஏற்கனவே அத்தகைய உதவித்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், ஆறாம் படிவத்திற்கும் அதே அங்கீகாரத்தை வழங்க வேண்டியது அவசியம் எனப் பிரதமர் சொன்னார்.
பல்கலைக்கழகப் பட்டப்படிப்புக்கு முந்தையக் கல்வியான ஆறாம் படிவம், கல்வி அமைச்சின் அதிகாரத்திலிருந்து உயர் கல்வி அமைச்சுக்கு மாறியிருப்பதற்கு ஏற்ப இது அமைகிறது.
ஜோகூர் பாருவில் Temenggong Ibrahim ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் ஆறாம் படிவ மாணவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் அன்வார் அவ்வாறு பேசினார்.
“மெட்ரிகுலேஷன், ஆறாம் படிவம் என இரண்டுமே பல்கலைக்கழக நுழைவுக்கான படிப்பாக இருந்தபோதும், மெட்ரிகுலேஷன் மாணவர்களுக்கு மட்டும் அலவன்ஸ் வழங்கப்படுவது ஏன்?” என ஆறாம் படிவ மாணவர் ஒருவர் பிரதமரிடம் கேட்டபோது இந்த பதில் வழங்கப்பட்டது.
இந்நிலையில், ஆறாம் படிவ மாணவர்களுக்கு அலவன்ஸ் தொகை எவ்வளவு என்பது உட்பட அதன் அமுலாக்கம் இன்னும் இறுதிச் செய்யப்படவில்லை என்றார் அவர்.
மெட்ரிகுலேஷன் மாணவர்கள், நடப்பில் வாழ்க்கைச் செலவினத் தொகையாக மாதந்தோறும் 250 ரிங்கிட்டைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.



