
கோலாலம்பூர், ஏப்ரல்-25-மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக Padini Holdings Bhd நிறுவனத்துடன் தொடர்புடைய பல வங்கி கணக்குகளை முடக்கியுள்ளது.
MACC மேற்கொண்ட இந்த நடவடிக்கையை, அந்த பிரபல துணிக்கடை மலேசியப் பங்குச் சந்தைக்கு அளித்த அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.
நிறுவனத்திற்கும் அதன் துணை நிறுவனங்களுக்கும் சொந்தமான சில கணக்குகள் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த முடக்கம், 2001 பணமோசடி தடுப்பு மற்றும் சட்டவிரோத வருவாய் தொடர்பான சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், பாதிக்கப்பட்ட கணக்குகள் நிறுவனத்தின் தினசரி செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்படாதவை என்றும், மற்ற வங்கி வசதிகள் மூலம் வணிகம் வழக்கம்போல் நடைபெறுவதாகவும் Padini தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை நிறுவனத்தின் நிதி நிலை அல்லது செயல்பாடுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் அது கூறிக் கொண்டது.
விசாரணை நடைபெற்று வரும் நிலையில், MACC அதிகாரிகளுடன் முழுமையாக ஒத்துழைப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
விசாரணைக் குறித்த மேல் தகவல்கள் MACC தரப்பிலிருந்து இதுவரை வெளியிடப்படவில்லை.



