Latestமலேசியா

இணைய மோசடிக் கும்பல் கொலை மிரட்டல் விடுத்திருப்பதாக பெரிக்காத்தான் நேசனல் கூட்டணியின் பொது புகார் பிரிவின் தலைவர் போலீசில் புகார்

ஜோகூர் பாரு மற்றும் சிங்கப்பூரில் தீவிரமாக செயல்பட்டுவரும் இணைய மோசடி கும்பல் ஒன்று தனக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்திருப்பதாக ஜோகூர் பெரிக்காத்தான் நேசனல் கூட்டணியின் பொது புகார் பிரிவின் தலைவர் Lim Thow Siang போலீசில் புகார் செய்துள்ளார். இணைய மோசடி கும்பல் குறித்த பல்வேறு விவகாரங்களில் கடந்த மூன்று வாரங்களாக தீவிரமாக கவனம் செலுத்தி வந்ததைத் தொடர்ந்து ஜூலை 18ஆம் தேதி மாலை 4 மணியளவில் தாம் மிரட்டலை பெற்றதாக 50 வயது மதிக்கத்தக்க லிம் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் தனது செயலினால் தங்களது நடவடிக்கைக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அந்த கும்பல் மிரட்டல் விடுத்துள்ளது. தனது அலுவலகத்திற்கு தீ வைக்கப்போவது அல்லது சுடப்படலாம் என அடையாளம் தெரியாத அக்கும்பல் புலனம் மூலம் மிரட்டல் விடுத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

கடந்த 18 ஆண்டு காலமாகவே இணைய மோசடி மற்றும் கடன் முதலைகளின் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு தான் உதவிவருவதாகவும் இதற்கு முன் பல முறை மிரட்டலுக்கு உள்ளானபோதிலும் இம்முறை அவர்களது மிரட்டல் கடுமையாக இருப்பதாக Taman Desa cemerlang போலீஸ் நிலையத்தில் புகார் செய்த பின் Lim தெரிவித்தார். கடந்த மூன்று வாரங்களில் இணைய மோசடியினால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து ஜந்து புகார்களை பெற்றதையும் அவர் சுட்டிக்காட்டினார். சிங்கப்பூரில் வேலை செய்யும் பெரும்பாலோர் இணைய மோசடி மற்றும் வட்டி முதலைகளின் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். சிலர் வட்டி முதலைகளிடம் கடன் வாங்காத போதிலும் இணைய மோசடியினால் ஏமாந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் கடுமையான நெருக்குதலுக்கு உள்ளாகிவருவதால் மோசடி கும்பல் மற்றும் வட்டி முதலைகளுக்கு எதிராக போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் லிம் கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!