கோலாலம்பூர், ஏப் 27 – மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவான மித்ரா இந்த ஆண்டு அரசாங்கம் ஒதுக்கிய 100 மில்லியன் ரிங்கிட்டில் இருந்து 40 மில்லியன் ரிங்கிட் இந்திய சமூகத்தின் மாற்றம் மற்றும் சமூகப் பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்யும் நோக்கத்தில் பல்வேறு திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மித்ரா சிறப்பு பணிக்குழுவின் தலைவர் P. Prabakaran தெரிவித்திருக்கிறார். பி40 எனப்டும் குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு முன்னுரிமை அளித்து பல்வேறு செயல்முறை திடடத்தின் மூலம் 40 மில்லியன் ரிங்கிட் ஆக்கப்பூர்வமாகவும் வெளிப்படையாகவும் செலவிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
எங்களுக்கு ஒரு இலக்கு அல்லது நோக்கம் இருக்கிறது. இதுவரை, மித்ரா வழங்கிய ஒதுக்கீடு மூலம் அரசு மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு நிதி உதவி, சிறுநீரக நோயாளிகளுக்கான Dialysis உதவி, மற்றும் தனியார் மழலையர் பாலர் பள்ளி மாணவர்களுக்கு உதவி உட்பட பல்வேறு திட்டங்களை மித்ரா அமல்படுத்தியுள்ளது. எஞ்சியிருக்கும்
60 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு கல்வி நிதி, தொழில் நிபுணத்துவ சான்றிதழ்கள், தோட்டம் மற்றும் கிராமப்புற மக்களுக்கு உதவி போன்ற பல திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளுக்கு பயன்படுத்தப்படும் என்று பினாங்கு இந்திய வர்த்தக மற்றும் தொழில் மன்ற மண்டபத்தில் நேற்று செய்தியாளர்களிடம் Prabakaran தெரிவித்தார்.
பினாங்கில் குறு , சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவர்ககள் உதவித் திட்டத்திற்குப் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். பினாங்கு மாநிலத்திலுள்ள இந்திய சமூகத்தைச் சேர்ந்த B40 பிரிவைச் சேர்ந்த
125 தொழில்முனைவோருக்கு வணிக உபகரணப் பொருட்கள் உதவி மற்றும் ஆலோசனைச் சேவைகளை வழங்க மொத்தம் 700,000 ரிங்கிட் ஒதுக்கீடு வழங்கப்பட்டதாக Prabakaran சுட்டிக்காட்டினார். நாட்டின் வளர்ச்சிப் பாதையில் இந்திய சமூகம் பின்தங்கியிருக்கக் கூடாது என்பதில் மித்ரா உறுதியுடன் இருப்பதோடு , அவர்களின் நலன்களைப் பாதுகாக்க தொடர்ந்து முனைப்புடன் செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.