Latestஉலகம்

இந்தோனேசியா இஜென் எரிமலை பள்ளத்தால் விழுந்து சீன பெண் சுற்றுப்பயணி உயிரிழப்பு

ஜகார்த்தா, ஏப்ரல் 22 – இந்தோனேசியா, கிழக்கு ஜாவாவில், “நீல வண்ண ஒளிக்கதிர்” நிகழ்வுக்கு பெயர் போன இஜென் எரிமலை பகுதியில், புகைப்படம் எடுக்கும் போது சீனப் பெண் ஒருவர், பாறையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.

கடந்த சனிக்கிழமை, 31 வயது ஹுவாங் லிஹோங் எனும் அப்பெண், தனது கணவரான 32 வயது ஜாங் யோங்குடன் அங்கு சென்றிருந்த போது அச்சம்பவம் நிகழ்ந்தது.

சம்பவத்தின் போது, சூரிய உதயத்தை காண அவர்கள் மலை உச்சியின் விளிம்பிற்கு ஏறியுள்ளனர். அப்பொழுது சொந்த ஆடையை மிதித்து அப்பெண் தடுக்கி பள்ளத்தில் விழுந்ததாக கூறப்படுகிறது.

சூரிய உதயத்தை படம் எடுப்பதற்காக, மரம் ஒன்றை நோக்கி சென்ற அப்பெண் கால் தவறி 75 மீட்டர் உயரத்திலிருந்து, பள்ளத்தில் விழுந்ததாக, அவர்களை அங்கு அழைத்துச் சென்ற சுற்றுலா வழிகாட்டி கூறியுள்ளார். அதோடு, அப்பகுதியை சூழ்ந்திருக்கும் ஆபத்து குறித்தும் தாம் அவர்களுக்கு நினைவுறுத்தி விட்டதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இஜென் எரிமலை, அதன் நீல சுடருக்கு பிரசித்து பெற்றது. அந்த நீல சுடரானது, உண்மையில் எரியும் எரிமலையின் கந்தக வாயுவிலிருந்து வெளிப்படும் நீல ஒளியாகும்.

அந்த தனித்துவமான அழகை காண சுற்றுப் பயணிகளும் ; அழகுசாதனப் பொருட்கள் மற்றும் தீப்பெட்டிகளில் பயன்படுத்தப்படும் மஞ்சள் கந்தகத்தை தோண்டி எடுக்க உள்ளூர் சுரங்கத் தொழிலாளர்களும் இஜென் எரிமலைக்கு படையெடுப்பது வழக்கமாகும்.

கடந்த பிப்ரவரியில், இஜென் மலையில் ஏறும் போது 53 வயதான போலந்து சுற்றுப்பயணி ஒருவர் உயிரிழந்த வேளை : 2015-ஆம் ஆண்டு , சூரிய உதயத்தை காண அந்த மலையில் ஏறிய 68 வயது சுவிட்சிலாந்து சுற்றுப் பயணி ஒருவர் மூச்சுத் திணறலுக்கு இலக்காகி மரணமடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!