
ஜோர்ஜ்டவுன், மே-11-அண்மையில் நிகழ்ந்த மரண விபத்துகளைக் கையாள்வதில் பாகுபாடு காட்டப்படுவதாக எழுந்த புகார்களை அரச மலேசியப் போலீஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
சமூக ஊடகங்களில் எழுந்த சர்ச்சை இரண்டு உயிரிழப்பு சம்பவங்களைச் சுற்றியதாகும்…
ஒன்று, கவனக்குறைவாக வேன் ஓட்டி இரண்டாம் வகுப்பு மாணவனின் மரணத்திற்கு காரணமான விபத்து;
மற்றொன்று, Proton X70 ஓட்டுநர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை மோதியதில் அவர் உயிரிழந்த சம்பவம்.
ஆனால், 72 வயது அந்த ஓட்டுநர் உடல்நலக் காரணங்களால் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
உயிர் பலிக்கு ஒருவரை தண்டிப்பதும் இன்னொருவரை விடுவிப்பதும் அப்பட்டமான பாரபட்சம் என இணையவாசிகள் சாடியுள்ளானர்.
இக்குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த போலீஸ் படைத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ ஆயோப் கான் மைடின் பிச்சை, இந்த இரண்டு வழக்குகளும் எவ்வித பாரபட்சமுமின்றி விசாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
“72 வயதானவரை லாக்கப்பில் தடுத்து வைத்தால், அவர் எப்படி டயாலிசிஸ் சிகிச்சைக்குச் செல்வார்?” என கேள்வி எழுப்பிய ஆயோப், “வேன் ஓட்டுநர் ஆரோக்கியமாக இருப்பதால் அவர் தடுத்து வைக்கப்பட்டார்,” என்றார்.
இதுவே அந்த முதிவரை தடுத்து வைத்திருந்தால், போலீஸுக்கு மனிதாபிமானமே இல்லையா என்ற கேள்வியும் எழுந்திருக்கும் என அவர் சுட்டிக் காட்டினார்.
போலீஸாரின் நடவடிக்கைக் காரணமில்லாமல் அமையாது.
எனவே, தவறான தகவல்களைப் பரப்பி விசாரணையைப் பாதிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்ட அவர், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என உறுதியளித்தார்.
இரு விபத்துகள் குறித்த முழுமையான விசாரணை அறிக்கைகளும் விரைவில் சட்டத் துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



