
புத்ராஜெயா, மே-11-நாட்டில் போதைப்பொருள் பயன்பாடு சிறுவர்களிடையே அதிகரித்து வருவது குறித்த ஒரு அதிர்ச்சிகரமான தகவலை தேசிய போதைப்பொருள் தடுப்பு நிறுவனமான AADK வெளியிட்டுள்ளது.
12 வயது சிறுவர்கள் கூட தற்போது செயற்கை போதைப்பொருள் (Synthetic Drugs) சோதனையில் சிக்கி வருவதாக, அதன் தலைமை இயக்குநர் டத்தோ ருஸ்லின் ஜூசோ கூறினார்.
முன்பு இயற்கை போதைப்பொருட்கள் அதிகம் பயன்படுத்தப்பட்ட நிலையில், தற்போது Yaba மற்றும் Pil Kuda போன்ற வீரியம் மிக்க செயற்கை போதைப்பொருட்கள் இளைஞர்களிடையே, குறிப்பாக பள்ளி மாணவர்களிடையே பரவி வருகின்றன.
19 முதல் 39 வயதுடையவர்களே போதைப்பொருள் பழக்கத்திற்கு அதிகம் ஆளாகி வரும் சூழலில், இப்போது 12 வயதிலேயே இப்பழக்கம் தொடங்குவது நாட்டின் எதிர்காலத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகும் என்றார் அவர்.
போதைப்பொருட்கள் எளிதில் கிடைப்பதும், அதன் குறைந்த விலையுமே இந்த நிலைக்குக் காரணம் என கூறப்படுகிறது.
எனவே, பெற்றோர்களும் சமூகமும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும், ஆரம்ப நிலையிலேயே இதனைக் கண்டறிந்து தடுப்பது அவசியம் என்றும் ருஸ்லின் வலியுறுத்தினார்.



