
மலாக்கா, மே-21-மலக்காவில் உள்ள சுங்கை ரம்பாய் தேசிய இடைநிலைப் பள்ளியின் வாயில்களை காலை மணி 7.30 க்கு மூடும் அப்பள்ளியின் முதல்வரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதனை கண்டிக்கும் வகையில் பல பதாகைகள் வைக்கப்பட்டது சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிக்குத் தாமதமாக வந்த ஒரே காரணத்திற்காக மாணவர்கள் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டதாகவும், கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்டதாகவும் அந்தப் பதாகையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், பள்ளியில் அதிகரித்து வரும் கட்டொழுங்கு பிரச்னை மற்றும் மாணவர்கள் பள்ளிக்கு மட்டம் போடும் தீவிரமான விவகாரங்களை சமாளிப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, மலக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ரஹ்மாட் மரிமான் (Rahmad Mariman) விளக்கமளித்தார்.
பள்ளி வாயில்களை மூடும் நடவடிக்கை முதல்வரின் தனிப்பட்ட முடிவு மட்டுமல்ல, மாறாக பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தின் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்ட முடிவாகும் என அவர் கூறினார்.
தாமதமாக வரும் மாணவர்கள் நேரடியாகப் படிப்பதிலிருந்து தடுக்கப்படவில்லை. மாறாக, பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, அவர்கள் ஒரு கலந்தாய்வு அமர்வு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைக்காக அழைக்கப்படுவார்கள் என்று ரஹ்மாட் விவரித்தார்.



