கோலாலம்பூர், ஆக 3 – சமய ஆசிரியர்களுக்கு பயிற்சியாகவே கோயிலுக்கான வருகை அமைவதாக பிரதமர்துறையின் சமய விவகாரப் பிரிவின் அமைச்சர் நயிம் மொக்தார் (Na’im Mokhtar) தெரிவித்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டு காலமாக Dakwah Harmoni எனப்படும் சமய ஐக்கிய பிரச்சார பயிற்சி நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார். சமய புரிந்துணர்வு மற்றும் திறனை வலுப்படுத்திக்கொள்ளும் நோக்கத்தில் இந்து கோயிலுக்கு இஸ்லாமிய பயிற்சியின் பங்கேற்பாளர்கள் வருகை புரிந்ததை அமைச்சர் Naim Mokhtar தற்காத்துக் பேசியுள்ளார். பேரா இஸ்லாமிய சமயத்துறையைச் சார்ந்து 32 தேர்ந்தெடுக்கப்பட்ட சமய ஆசிரியர்களுக்கு மட்டுமே அந்த Dakwah Harmoni பயிற்சி அண்மையில் நடத்தப்பட்டது. பொது மக்களுக்கு அல்ல.
இந்த வழக்கமான திட்டம், சமயப் பிரச்சாரம் பற்றிய புரிதல் மற்றும் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தொடர்ச்சியான பயிற்சி அமர்வுகளின் ஒரு பகுதியாகும். இது சமய ஆசிரியர்களின் நிபுணத்துவத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் மற்ற சமயங்கள் குறித்து துல்லியமான அறிவையும் அவர்களின் ஒப்பீடுகளையும் இளைய தலைமுறைக்கு வழங்க முடியும் . நாட்டின் இளைஞர்களின் சமய நம்பிக்கைக்கு இந்தப் பயிற்சி அச்சுறுத்தலாக அமையும் என்ற அரசியல்வாதிகளின் கூற்றுகளை அவர் நிராகரித்தார்.
அரசாங்கத்தின் நற்பெயரையும் இஸ்லாத்தின் நிலைப்பாட்டை வலுப்படுத்துவதற்கான அதன் அர்ப்பணிப்பையும் கெடுக்கும் நோக்கத்தில் மட்டுமே இந்த குற்றச்சாட்டுகள் இருப்பதாக நயிம் கூறினார்.
கோலாலம்பூரில் கம்போங் ங் காசிப்பிள்ளையில் (Kampung Kasipillay) உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலுக்கு இஸ்லாமிய பேராளர் குழுவினர் சென்ற காணொளி காட்சி அண்மையில் வைரலானது. ஒரு பெண் பங்கேற்பாளரின் கருத்து தவறான புரிதலை ஏற்படுத்தியதை அடுத்து இந்த வருகை சர்ச்சையானதுதோடு சமூக ஊடகங்களில் சூடான விவாதங்களைத் தூண்டியுள்ளது.