பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட்-15, சமூக ஊடகங்கள் வாயிலாக சிறார் பாலியல் குற்றங்களை உட்படுத்திய சம்பவங்களின் எண்ணிக்கை நாட்டில் அதிகரித்து வருகின்றது.
2022-டில் 360-தாக இருந்த அவ்வெண்ணிக்கை கடந்தாண்டு 525-தாக பதிவானதாக, தொடர்புத் துறை துணையமைச்சர் தியோ நீ ச்சிங் (Teo Nie Ching) தெரிவித்தார்.
இவ்வாண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் அத்தகைய 288 சம்பவங்கள் பதிவாகியிருப்பதாக போலீசின் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
இதில் என்ன அதிர்ச்சியென்றால், நாட்டில் 12 முதல் 17 வயதுடைய பதின்ம வயதினரில் 94 விழுக்காட்டினர் இணையத்தில் இருக்கின்றனர்.
இந்த டிஜிட்டல்மய காலத்தில் இணையத்தில் அவர்களின் பாதுகாப்பு நமக்கு பெரும் கவலையாக உள்ளதென துணையமைச்சர் சொன்னார்.
இணையப் பாலியல் துன்புறுத்தல்களையும், ஆபத்தான பல அனுபவங்களையும் மலேசியக் குழந்தைகள் எதிர்கொண்டு வருகின்றனர்.
இணையம் குறிப்பாக சமூக ஊடகங்கள் அவர்களுக்கு பாதுகாப்பானவையாக இருத்தல் வேண்டுமென தியோ நி ச்சிங் கூறினார்.