Latestமலேசியா

சரணடைவீர், இல்லையேல் விளைவு மோசமாக இருக்கும்; KLIA-வில் துப்பாக்கிச் சூடு நடத்திய ஆடவருக்கு போலீஸ் எச்சரிக்கை

கோலாலம்பூர், ஏப்ரல்-15, KLIA-வில் துப்பாக்கிச் சூட்டை நடத்தித் தப்பியோடிய ஆடவர் தானாக வந்து சரணடைய வேண்டும்; இல்லையேல் விளைவுகள் மோசமாக இருக்கும் என போலீஸ் எச்சரித்துள்ளது.

தீபகற்பத்தின் வட மாநிலமொன்றில் பதுங்கியிருப்பதாக நம்பப்படும் அவ்வாடவர், உடனடியாக அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் சரணடைவது நல்லது என, புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் Shuhaily Zain தெரிவித்தார்.

Hafizul Zarawi எனப்படும் 38 வயது அந்நபர் ஏற்கனவே 2 குற்றப்பதிவுகளைக் கொண்டவர்; ஒன்று மிரட்டியது மற்றொன்று அரசு ஊழியராக ஆள் மாறாட்டம் செய்து திருட்டில் ஈடுபட்டது என Shuhaily சொன்னார்.

விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ள அவ்வாடவரும், அவரின் மனைவியும் பயண நிறுவனமொன்றின் பங்காளிகள் என தெரிய வருகிறது.

கணவரால் தனது உயிருக்கு ஆபத்து என அப்பெண் ஏற்கனவே ஒரு முறை போலீசில் புகார் செய்து, அவர் விசாரணைக்குக் கைதானவர் என்பதும் அம்பலமானது.

அந்நபரிடம், சுடும் ஆயுதங்களை வைத்திருக்கும் உரிமம் இல்லை; ஆக சட்டவிரோதமாக தான் எங்கிருந்தாவது அதனை அவர் பெற்றிருக்க வேண்டும் என Shuhaily கூறினார்.

இச்சம்பவத்தை அடுத்து, KLIA-வில் பாதுகாப்பு அம்சங்கள் மறுஆய்வுச் செய்யப்படும் என்றார் அவர்.

இவ்வேளையில், துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளான மெய்காவலர், இன்னமும் கவலைக்கிடமான நிலையில் தான் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தப்பியோடிய ஆடவர் தன் மனைவிக்கு வைத்தக் குறி தப்பி, அருகில் இருந்த அவரின் மெய்க்காவலர் மீது பட்டது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!