ஷா அலாம், ஜூலை 25 – Sungai Kundang மற்றும் Sungai Sembah வில் துர்நாற்றம் தூய்மைக்கேடு ஏற்பட்டதைத் தொடர்ந்து நான்கு நீர் சுத்திகரிப்பு மையங்களின் செயல்பாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் சிலாங்கூரில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர் விநியோகம் தற்போது 83.5 விழுக்காடு வழக்க நிலைக்கு திரும்பியது. மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்த அனைத்து இடங்களிலும் இன்று காலை 7.30 மணிவரை நீர் விநியோகம் வழக்க நிலைக்கு திரும்பியதாக Pengurusan Air Selangor வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனீட்டாளர்களின் குடியிருப்பு இடங்கள் மற்றும் நீர் விநியோக அழுத்தத்தைப் பொறுத்து நீர் விநியோகம் மீண்டும் வழக்க நிலைக்கு திரும்பியது.
பாதிக்கப்பட்ட முதல் பிரிவு பகுதியில் நீர் விநியோகம் இன்று காலை 7.30 மணியளவில் முழுமையாக திரும்பியது. 2ஆவது பிரிவுக்கான இடங்களில் இன்றிரவு 8 மணியளவிலும், மூன்றாவது பிரிவுக்கான இடங்களில் நாளை காலை மணி 8 அளவில் நீர் விநியோகம் வழக்க நிலைக்கு திரும்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் டாங்குகள் மூலமாக நீர் விநியோகம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முக்கியமாக மருத்துவமனைகள், இறுதிச் சடங்கு நடைபெறும் இடங்களுக்கு நீர் வழங்குவதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.